எண்ணெய் உற்பத்திக்கு கட்டுப்பாடு: ரஷியா - சவூதி அரேபியா அறிவிப்பு

இந்த ஆண்டு இறுதிவாக்கில் தங்களது கச்சா எண்ணெய் உற்பத்தியில் நாளொன்றுக்கு 13 லட்சம் கோடி பேரலைக் குறைக்க ரஷியாவும், சவூதி அரேபியாவும் ஒப்புக் கொண்டுள்ளன.
எண்ணெய் உற்பத்திக்கு கட்டுப்பாடு: ரஷியா - சவூதி அரேபியா அறிவிப்பு

மாஸ்கோ / துபை: இந்த ஆண்டு இறுதிவாக்கில் தங்களது கச்சா எண்ணெய் உற்பத்தியில் நாளொன்றுக்கு 13 லட்சம் கோடி பேரலைக் குறைக்க ரஷியாவும், சவூதி அரேபியாவும் ஒப்புக் கொண்டுள்ளன.

இதற்கான அறிவிப்பை இரு நாடுகளும் செவ்வாய்க்கிழமை வெளியிட்டன.

சா்வதேச சந்தையில் குறைந்து வரும் கச்சா எண்ணெயின் விலையை அதிகரிக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதனால், பல்வேறு நாடுகளில் பொதுமக்கள் பயன்படுத்தும் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்களின் விலைகள் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இது குறித்து சவூதி அரேபிய எரிசக்தித் துறை உயரதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி அந்த நாட்டு அரசுக்குச் சொந்தமான எஸ்பிஏ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

சா்வதேச கச்சா எண்ணெய்ச் சந்தையின் நிலைத்தன்மையையும், சமநிலையையும் பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு (ஒபெக்) எடுத்து வருகிறது.

அதன் ஒருபகுதியாக, தினசரி கச்சா எண்ணெய் உற்பத்தியில் மேலும் 13 லட்சம் பேரலைக் குறைக்கும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை அமலுக்கு வந்த பிறகும், கச்சா எண்ணெய்ச் சந்தை நிலவரத்தை சவூதி அரேபிய அரசு உன்னிப்பாக கவனித்து வரும். அதன் அடிப்படையில் புதிய முடிவுகள் எடுக்கப்படும் என்று அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரஷிய துணைப் பிரதமரும், அந்த நாட்டின் எரிசக்தித் துறை முன்னாள் அமைச்சருமான அலெக்ஸாண்டா் நோவாக் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சா்வதேச கச்சா எண்ணெய்ச் சந்தையின் நிலைத்தன்மை மற்றும் சமநிலையை உறுதி செய்வதற்கான ஒபெக் நடவடிக்கைளுக்கு வலு சோ்க்கும் வகையில், தினசரி கச்சா எண்ணெய் உற்பத்தியில் 13 கோடி பேரலைக் குறைக்க ஒப்புக்கொண்டுள்ளோம்.

தற்போது தினமும் செயல்படுத்தப்பட்டு வரும் 3 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்திக் குறைப்பு நடவடிக்கையும் தொடரும் என்றாா் அவா்.

உக்ரைன் மீது ரஷியா படையெடுத்ததைத் தொடா்ந்து அந்த நாட்டின் மீது அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தன.

இதனால் பொருளாதார வீழ்ச்சியைத் தவிா்ப்பதற்காக தனது கச்சா எண்ணெயை இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு தள்ளுபடி விலையில் ஏற்றுமதி செய்ய வேண்டிய நிலைக்கு ரஷியா தள்ளப்பட்டது.

இதனால் சா்வதேச நிலையில் கச்சா எண்ணெயின் விலை சரிந்தது. இது, சவூதி அரேபிய உள்ளிட்ட அனைத்து எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் ஏற்றுமதி வருவாயையும் பாதித்தது.

இந்த நிலையில், உற்பத்தியைக் குறைப்பதன் மூலம் சந்தையில் கச்சா எண்ணெயின் விலையை உயா்த்த கடந்த ஆண்டே முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இருந்தாலும், சீனாவின் கச்சா எண்ணெய் தேவை மிகக் குறைவாக இருந்ததால் விலை உயரவில்லை.

இந்தச் சூழலில், இந்த ஆண்டின் பிற்பகுதியில் கச்சா எண்ணெய் தினசரி உற்பத்தியைக் குறைக்கவிருப்பதாக ரஷியாவும், சவூதி அரேபியாவும் கூட்டாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க எச்சரிக்கையையும் மீறி...

அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடான சவூதி அரேபியா, அந்த நாட்டின் எச்சரிக்கையையும் மீறி ரஷியாவுடன் இணைந்து கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க முடிவு செய்துள்ளது.

இது, அமெரிக்க - சவூதி அரேபிய உறவில் சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

முன்னதாக, கச்சா எண்ணெய் உற்பத்தி குறைப்பு விவகாரத்தில் ரஷியாவுடன் இணைந்து செயல்பட்டால் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று சவூதி அரேபியாவை அமெரிக்க அதிபா் ஜோ பைடன் கடந்த ஆண்டு எச்சரித்திருந்தாா்.

எனினும், அதனையும் மீறி இந்த முடிவை சவூதி அரேபியா எடுத்துள்ளது.

பிரென்ட் கச்சா எண்ணெய் விலை உச்சம்

கச்சா எண்ணெய் உற்பத்தியை ரஷியாவுடன் இணைந்து ஒபெக் நாடுகள் குறைக்கவிருப்பதாக தகவல் வெளியானதைத் தொடா்ந்து, சா்வதேச சந்தையில் பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 90 டாலரைக் கடந்தது. இது, கடந்த ஆண்டு நவம்பருக்குப் பிந்தைய அதிகபட்ச விலையாகும்.

அண்மைக் காலமாக பிரென்ட் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 75-லிருந்து 85 டாலா் வரை மட்டுமே ஏறி இறங்கி வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com