வாஷிங்டன் : பொதுவாக சூரிய அல்லது சந்திர கிரகணம் நிகழ்ந்தாலே எல்லோரும் வானத்தைப் பார்த்துக்கொண்டிருப்பார்கள். அல்லது தொலைநோக்கிகள் வழியாக சூரிய கிரகணத்தை ரசிப்பார்கள்.
ஆனால், பார்வை மாற்றுத் திறனாளிகளும், கேட்கும் திறன் மாற்றுத் திறனாளிகளும் என்ன செய்வார்கள்? ஆனால், வரும் ஏப்ரல் 8ஆம் தேதி நிகழும் சூரிய கிரகணத்தை, வட அமெரிக்காவில் உள்ள மாற்றுத்திறனாளிகள் கேட்கவும் உணரவும் முடியும்.
அதாவது, வட அமெரிக்காவில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்தக் கருவியை பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. இங்கு ஒட்டுமொத்த சூரிய கிரகணத்தையும் மாற்றுத்திறனாளிகள் ஒலி மூலம் கேட்கவும், தொடுவதன் மூலம் உணரவும் முடியுமாம்.
கிரகணங்கள் என்பது இயற்கையாகவே மிகவும் ரசித்துப் பார்க்கத்தக்கது. எனவே, உலகில் பிறந்த எவர் ஒருவரும், அதனை தங்களது வாழ்நாளில் ரசித்திட வேண்டம் என்று ஆவலில் டெக்ஸாஸ் பள்ளி மாணவர் யுகி ஹேட்ச் தெரிவித்துள்ளார்.
யுகி ஹேட்ச், பார்வை மாற்றுத்திறனாளி மாணவி. இவர் கணினியில் சிறந்து விளங்குவதால் ஒரு நாள் நிச்சயம் நாசா விஞ்ஞானியாவேன் என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார். ஒரு கிரகண நாளில், இவரும் இவர்களது பள்ளித் தோழிகளும் டெக்ஸாஸ் பள்ளியில் அமர்ந்திருந்த போது, ஒளி,ஒலி பெட்டியின் மூலம், கிரகண நிகழ்வுகள் ஒவ்வொன்றும் வார்த்தைகளாக பெயர்க்கப்பட்டு சூரியன் எந்தெந்த நிறத்தில் மாறுகிறது என்று அவர்களுக்குச் சொல்லிக்கொண்டே வந்தது. அப்போதுதான் முதல் முறையாக சூரிய கிரகணத்தை பார்ப்பதற்கு பதிலாக கேட்டு உணர்ந்துகொண்டேன் என்கிறார்.
பார்வை மாற்றுத்திறனாளி மற்றும் வானியல் அறிஞரான வாண்டா டியாஸ் மெர்சட் மற்றும் ஹார்வர்டு வானியல் அறிஞர் ஆலிசன் பெரைலா இருவரும் இணைந்துதான் இந்த கருவியைக் கண்டுபிடித்தனர். டியாஸ் மெர்செட் வழக்கமாக தனது ஆராய்ச்சிகளுக்காக அனைத்தையும் ஆடியோவாக பதிவு செய்து அதனை ஆய்வு செய்து வந்தவர்.
முதல் முறையாக அமெரிக்காவில் 2017ஆம் ஆண்டு கிரகணத்தின் போது இந்தக் கருவி பயன்படுத்தப்பட்டது. பிறகு அனைத்து கிரகணங்களின் போதும் இந்தக் கருவியின் பயன்பாடு அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டு, கிட்டத்தட்ட 750 கருவிகளை தயாரித்து பல்வேறு பகுதிகளுக்கும் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மெக்ஸிகோ, அமெரிக்கா, கனடாவிலும் இது வழங்கப்படவிருக்கிறது. பல்கலைக்கழகங்களில் இது தொடர்பான கருத்தரங்ககளும் நடத்தப்படுகின்றன. இந்த வானம் அனைவருக்குமானது, இந்த கிரகண நிகழ்வு உலகின் அனைத்துப் பகுதிகளுக்குமானது என்றால், அப்போது அது பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கும்தான் என்கிறார் டியான் மெர்சட். மாணவர்களுக்கு கிரகணங்கள் கேட்க வேண்டும், நட்சத்திரங்களையும் உணர வேண்டும் என்று விரும்புகிறார்.