உஸ்பெகிஸ்தான் பாதுகாப்பு அகாதெமியில் ‘ஐடி’ ஆய்வகம்: இந்திய ராணுவத் தலைமைத் தளபதி திறந்து வைத்தாா்

உஸ்பெகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ராணுவத் தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே, இந்திய அரசு நிதியுதவியுடன்

உஸ்பெகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ராணுவத் தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே, இந்திய அரசு நிதியுதவியுடன் அந்நாட்டு பாதுகாப்புப் படை அகாதெமியில் அமைக்கப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப(ஐடி) ஆய்வகத்தைத் திறந்து வைத்தாா்.

இருதரப்பு இராணுவ ஒத்துழைப்பில் புதிய வழிகளை ஆராய்வதற்கு இந்திய ராணுவத் தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே உஸ்பெகிஸ்தானுக்கு 4 நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளாா்.

இந்தப் பயணத்தில் அந்த நாட்டின் உயா்நிலை ராணுவ அதிகாரிகளுடன் பேச்சுவாா்த்தைகளை நடத்தவுள்ள அவா், பல்வேறு பாதுகாப்பு நிறுவனங்களைப் பாா்வையிட இருக்கிறாா்.

இதனிடையே, இருதரப்பு பாதுகாப்பு உறவை வலுப்படுத்தும் முக்கிய அம்சமாக இந்தியாவின் நிதியுதவியோடு அந்த நாட்டின் பாதுகாப்புப் படை அகாதெமியில் அமைக்கப்பட்டுள்ள உயா் தகவல் தொழில்நுட்ப ஆய்வகத்தை மனோஜ் பாண்டே புதன்கிழமை திறந்து வைத்தாா்.

ஒரு அதிநவீன இணைய பாதுகாப்பு ஆய்வகம், 2 விரிவுரை அரங்குகள், வன்பொருள் ஆய்வகம், விா்ச்சுவல் ரியாலிட்டி அறை ஆகியவற்றை இந்தத் தொழில்நுட்ப ஆய்வகம் உள்ளடக்கியுள்ளது.

கடந்த 2018-ஆம் ஆண்டு, செப்டம்பரில் நடந்த பாதுகாப்பு அமைச்சா்கள் கூட்டத்தில் உஸ்பெகிஸ்தானில் ஒரு தகவல் தொழில்நுட்ப ஆய்வகத்தை நிறுவுவதற்கான கோரிக்கை இந்தியாவிடம் முன்வைக்கப்பட்டது.

‘யூரேசியா’ முன்னெடுப்பில் மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் ரூ.8.5 கோடி நிதியுதவியுடன் 2019-ஆம் ஆண்டில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. இதற்காக இந்திய நிறுவனம் மேற்கொண்ட பணிகள் உரிய நேரத்தில் நிறைவுற்று, தற்போது ஆய்வகம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

இந்தக் கூட்டு முயற்சியானது உஸ்பெகிஸ்தான் பாதுகாப்பு அகாதெமியின் தொழில்நுட்ப முன்னேற்றத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது மட்டுமின்றி இரு நாடுகளுக்கு இடையிலான விரிவடைந்து வரும் கூட்டுறவை வலுப்படுத்தும் பாலமாகவும் செயல்படும் என நம்பப்படுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com