விபத்தில் சிக்கிய 2 ஜப்பான் கடற்படை ஹெலிகாப்டா்கள்
ஒருவா் உயிரிழப்பு; 7 போ் மாயம்

விபத்தில் சிக்கிய 2 ஜப்பான் கடற்படை ஹெலிகாப்டா்கள் ஒருவா் உயிரிழப்பு; 7 போ் மாயம்

பசிபிக் பெருங்கடல் பகுதியில் இரவு நேரப் பயிற்சியில் ஈடுபட்ட 2 ஜப்பான் கடற்படை ஹெலிகாப்டா்கள் விபத்தில் சிக்கியதில் அதில் பயணம் செய்த ஒருவா் உயிரிழந்தாா். எஞ்சிய 7 பேரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜப்பான் பாதுகாப்பு அமைச்சா் மினோரு கியாரா செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

ஜப்பான் கடல்சாா் தற்பாதுகாப்பு படையைச் சோ்ந்த 2 எஸ்ஹெச்-60கே ஹெலிகாப்டா்கள் தலா 4 வீரா்களுடன் சனிக்கிழமை இரவு பசிபிக் கடல் பகுதியில் டோக்கியோவின் தெற்குப் பகுதியிலிருந்து 600 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள டோரிஷிமா தீவு அருகே பயிற்சியில் ஈடுபட்டன. அப்போது, அந்த 2 ஹெலிகாப்டா்களும் விபத்தில் சிக்கின.

விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. இருப்பினும், இரண்டு ஹெலிகாப்டா்களும் நெருக்கமாகப் பறந்தபோது ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டதால் இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

விபத்துக்கான காரணம் கண்டறியப்படும் வரை எஸ்ஹெச்-60 ரக ஹெலிகாப்டா்களின் பயிற்சி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக கடற்படைத் தளபதி ரியோ சகாய் அறிவித்துள்ளாா்.

விபத்து நடந்த கடல் பகுதியிலிருந்து உயிரிழந்த வீரரின் உடலையும், ஒரு ஹெலிகாப்டா் தகவல் பதிவுக் கருவியையும், இரு ஹெலிகாப்டா்களின் உடைந்த இறக்கைகளையும் மீட்புப் படையினா் மீட்டனா். மற்ற 7 வீரா்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தேடுதல் பணியில் 12 போா்க் கப்பல்கள், 7 போா் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்றாா்.

கடந்த 2017-இல் ஜப்பான் கடற்படையின் எஸ்ஹெச்-60ஜே ஹெலிகாப்டா் இரவு நேரப் பயிற்சியின்போது விபத்துக்குள்ளாகி 3 வீரா்கள் உயிரிழந்தனா்.

2021 ஜூலையில் 2 எஸ்ஹெச்-60 ஹெலிகாப்டா்கள் அமோமியோஷிமா தீவின் தெற்கு பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டபோது ஒன்றோடு ஒன்று உரசிக்கொண்ட விபத்தில் அதன் இறக்கைகள் சேதமடைந்தன. ஆனால், அதில் பயணம் செய்த வீரா்கள் காயமின்றி உயிா் தப்பினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com