காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

அதே நாளில் டிரம்ப்பைக் கொல்ல மற்றொரு சதி! புதிய தகவல்கள்...

முன்னாள் அதிபர் டிரம்ப்பை கொல்ல திட்டமிட்ட பாகிஸ்தானியர் கைது

News image
தேர்தல் பிரசாரத்தின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த டிரம்ப்பை பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் பாதுகாவலர்கள்
Updated On :7 ஆகஸ்ட் 2024, 9:10 am

இணையதளச் செய்திப் பிரிவு

அமெரிக்க முன்னாள் அதிபரும் தற்போதைய அதிபர் தேர்தல் வேட்பாளருமான டொனால்ட் டிரம்பைக் கொலை செய்வதற்காக நீண்டகாலமாகத் திட்டம் தீட்டிவந்ததாகக் கூறப்படும் பாகிஸ்தானியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தத் தகவலை, கைது செய்யப்பட்டவர் பெயரைக் குறிப்பிடாமல் அமெரிக்க அரசின் தலைமை வழக்குரைஞர் மெரிக் கார்லண்ட் தெரிவித்தார்.

ஈரானிய ராணுவத்தின் மேஜர் ஜெனரல் காசெம் சுலைமானியைக் கொல்ல, 2020 ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபராக இருந்த டிரம்ப் உத்தரவிட்டிருந்தார்.

இதன் காரணமாகவே, டிரம்ப் மீது கொலை முயற்சிகளை மேற்கொள்ள ஈரான் முயலுவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அமெரிக்காவின் தலைமை வழக்குரைஞர் மெரிக் கார்லண்ட் கூறுவதாவது:

"ஈரானிய ஜெனரல் காசெம் சுலைமானி கொல்லப்பட்டதால், பழிதீர்க்கும் விதமாக, அமெரிக்க அதிகாரிகளுக்கு எதிராக பதிலடி கொடுக்க முயலும் ஈரானின் வெட்கக்கேடான மற்றும் இடைவிடாத முயற்சிகளை எதிர்கொள்வதற்காக, பல ஆண்டுகளாக அமெரிக்க நீதித் துறை தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது" என்று கூறினார்.

அமெரிக்க உளவு அமைப்பு (எப்.பி.ஐ. - ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன்) காவல்துறையினர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவரிடம் மேற்கொண்ட விசாரணையில், ஆசிஃப் ராசா மெர்ச்சென்ட் என்ற இந்த நபருக்கு, பாகிஸ்தானில் ஒரு மனைவியும் ஈரானில் ஒரு மனைவியும் இரு நாடுகளிலுமே குழந்தைகளும் இருக்கின்றனர்.

பாகிஸ்தானில் இருந்து அமெரிக்காவுக்கு ஏப்ரல் மாதத்தில் வணிகர்போல ஆசிஃப் வந்துள்ளார். இந்த நிலையில், அமெரிக்காவில் டிரம்பைக் கொலை செய்வதற்காக, கூலிப்படை கொலையாளிகளைத் தேடி வந்துள்ளார்.

ஆனால், அதிர்ஷ்டவசமாக, உளவுத் துறைக்காகச் செயல்பட்டு வந்தவர்களை, கூலிப்படை என எண்ணி, அவர்களைக் கொலைத் திட்டத்தில் சேர்த்துக்கொண்டார். ஆசிஃப் உடனிருந்து, அவரின் கொலைத் திட்டங்கள் முழுவதையும், சட்ட அமலாக்கத்திற்கு உளவாக அளித்து வந்துள்ளனர், உளவுத் துறையினர்.

ஆசிஃப்பின் திட்டம் என்னவெனில், ஜூலை 13 ஆம் தேதியில் ஒரு முக்கிய அரசியல்வாதியின் வீட்டிலிருந்து முக்கிய ஆவணங்களையும் பென்டிரைவ்களையும் கொள்ளையடிக்க வேண்டும்.

தொடர்ந்து, அதே நாளில் டிரம்ப் நடத்தும் அரசியல் பேரணியில் ஆர்ப்பாட்டம் செய்தால், காவல்துறையினர் கொள்ளையர்களையும், ஆர்ப்பாட்டக்காரர்களையும்தான் தேடுவர். அந்த நேரத்தில்தான், டிரம்பைக் கொலை செய்ய சரியான நேரம்.

அதுமட்டுமின்றி, திட்டத்தின் ஒவ்வொரு செயல்முறைக்கும் ஒவ்வொரு தனித்துவமான பெயரை அடையாளமாக இட்டுள்ளனர்.

பேரணியின்போது, எதிர்ப்பு தெரிவிக்கும் செயல்முறைக்கு `டீ-ஷர்ட்’ என்றும், அரசியல்வாதியின் வீட்டில் ஆவணங்களைத் திருடுவதற்கு `ஃபிளானல் ஷர்ட்’ என்றும், டிரம்ப் நடத்திய பேரணிக்கு `யார்ன் டை’ என்றும், டிரம்பைக் கொலைசெய்யும் செயல்முறைக்கு `வுல்ஃப்ஸ் ஜாக்கெட்’ என்றும் பெயரிட்டுள்ளனர்.

உதாரணமாக, யார்ன் டை வணிகத்தில் தனக்கு ஒரு மாமா இருப்பதாகவும், அவர்களுடன் வணிகம் செய்யலாம் என்றும் ஆசிஃப் கூறினார்.

இந்த திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக, கூட்டாளிகளுக்கு 5,000 டாலர்களை அளித்துள்ளார், ஆசிஃப். மேலும், தான் அமெரிக்காவை விட்டுச் சென்ற பிறகுதான், கொலைத் திட்டம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, ஜூலை 13ஆம் தேதியில் கொலைத் திட்டம் முடிக்கப்படும் என்ற எண்ணத்தில், ஆசிஃப் ஜூலை 12ஆம் தேதியில் விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். ஆனால், ஆசிஃபை விமான நிலையத்திலேயே வைத்து, அமெரிக்க காவல்துறையினர் கைது செய்துவிட்டனர்.

அதுமட்டுமின்றி, டிரம்ப்பை கொலை செய்ய உருவாக்கப்பட்ட ஆசிஃபின் திட்டம் முழுவதும் முறியடிக்கப்பட்டது.

இருப்பினும், டிரம்ப் நடத்திய பேரணியின்போது, தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் என்ற 20 வயது இளைஞர் ஒருவர், துப்பாக்கியால் டிரம்ப்பை சுட்டுள்ளார். இந்த தாக்குதலில், டிரம்ப்பின் வலது காதில் காயம் ஏற்பட்டதுடன், பார்வையாளர்களில் ஒருவர் உயிரிழந்தார்.

இந்தத் தாக்குதலின்போது டிரம்ப்பின் சிறப்புப் பாதுகாவலா் துப்பாக்கியால் சுட்டதில் தாமஸ் உயிரிழந்தார்.

இருப்பினும், டிரம்ப்பை சுட்ட தாமஸுக்கும் ஆசிஃபுக்கும் எந்தவிதமான தொடர்புமில்லை என்று எப்.பி.ஐ. தெரிவித்தது.

வர்ஜீனியாவைச் சேர்ந்த ஃப்ராங்க் லூசியோ கரில்லோ என்பவர் கடந்த வாரத்தில், ``கமலா ஹாரிஸ் உயிருடன் எரிக்கப்பட வேண்டும். வேறு யாரும் செய்யாவிட்டாலும், நான் அதைச் செய்வேன். அவர் மெதுவாக வேதனையான மரணத்தை அனுபவிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்’’ என்று சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்தார்.

மேலும், அதிபர் ஜோ பைடன் மற்றும் எப்.பி.ஐ. தலைவர் ஆகியோருக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாக லூசியோ கைது செய்யப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.