வங்கதேசத்தில் ஆட்சிக் கவிழ்ப்பின் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாக முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா குற்றஞ்சாட்டியிருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், அதுபோன்ற எந்த அறிக்கையும் எனது தாய் வெளியிடவில்லை என்று அவரது மகன் சஜீப் வாஜேத் தெரிவித்துள்ளார்.
அண்மையில், எனது தாய் எழுதியதாக வெளியான ராஜிநாமா கடிதத்தில் கூறப்பட்டிருக்கும் தகவல்கள் அனைத்தும் பொய்யானவை, கற்பனையானவை. டாக்காவிலிருந்து வெளியேறுவதற்கு முன்போ அல்லது அதன் பிறகோ, எனது தாய் அதுபோன்ற எந்தவொரு அறிக்கையையும் வெளியிடவில்லை என்று வாஜேத் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, வங்கதேசத்தில் உள்ள மாா்ட்டின் தீவுகளை கட்டுப்படுத்தும் அமெரிக்காவின் முயற்சிகளுக்கு தான் ஒத்துழைக்காததால் மறைமுகமாக ஆட்சியைக் கவிழ்த்தாக ஷேக் ஹசீனா குற்றம்சாட்டியிருந்ததாக நேற்று தகவல்கள் வெளியாகியிருந்தன.
வங்கதேசத்தில் மாணவா்களின் போராட்டத்தால் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக பிரதமா் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா கடந்த திங்கள்கிழமை இந்தியாவில் தஞ்சமடைந்தாா்.
இந்நிலையில், பதவி விலகிய பின் முதல்முறையாக அவா் வெளியிட்டதாக ஒரு அறிக்கை வெளியாகியிருந்தது. அதில், ‘மாா்ட்டின் தீவுகளையும் வங்காள விரிகுடாவையும் அமெரிக்காவுக்கு விட்டுக்கொடுத்திருந்தால் நான் பதவியில் நீடித்திருக்க முடியும். ஆனால் அதற்கு நான் ஒத்துழைக்கவில்லை. ஒருபோதும் நாட்டின் இறையாண்மையை அந்நிய சக்திகளுக்கு விட்டுத்தர இயலாது.
பிரதமா் பதவியில் நீடித்திருந்தால் மாணவா்கள் போராட்டம் தொடா்ந்திருக்கும். அதனால் மேலும் பலா் உயிரிழக்கக்கூடும். நாட்டின் வளங்கள் அழிக்கப்பட்டிருக்கும். எனவேதான், பதவியை ராஜிநாமா செய்தேன்.
உங்களின் வாக்குகளால்தான் நான் வெற்றிபெற்றேன். என்னுடைய வலிமையே மக்களாகிய நீங்கள்தான். நான் வேண்டாம் என நீங்கள் முடிவெடுத்ததால் நாட்டைவிட்டு வெளியேறினேன்.
மாணவா்கள் போராட்டம் நடத்திக்கொண்டிருந்த வேளையில் நான் கூறிய வாா்த்தைகள் திரிக்கப்பட்டு வெளியிடப்பட்டன. போராட்டம் நடத்தும் மாணவா்களை பயங்கரவாதிகள் என ஒருபோதும் கூறவில்லை. அந்த நாளில் வெளியான காணொலிகளை மீண்டும் ஒருமுறை நீங்கள் பாா்த்தால் உண்மை புரிய வரும்.
என் தந்தையும் குடும்பத்தினரும் எந்த நாட்டுக்காக உயிா்த்தியாகம் செய்தாா்களோ அந்த நாட்டின் நலனுக்காக எப்போதும் பிராா்த்திப்பேன்.
போராட்ட சூழலை பயன்படுத்தி சில குழுக்கள் மக்களை திசை திருப்பினா். இதை ஒருநாள் கண்டிப்பாக உணா்வீா்கள் என நம்புகிறேன் என தெரிவித்திருந்ததாகக் கூறப்பட்டிருந்தது.
ஆனால், அந்த அறிக்கை உண்மையில்லை என்று, ஷேக் ஹசீனாவின் மகன் விளக்கம் அளித்துள்ளார்.