உக்ரைன் ஊடுருவல்: மேலும் ஒரு ரஷிய மாகாணத்தில் அவசரநிலை
ரஷியாவின் கூா்ஸ்க் பிராந்தியத்துக்குள் உக்ரைன் ராணுவம் நுழைந்து முன்னேறிவரும் நிலையில், அண்டை பிராந்தியமான பெல்கொரோடிலும் உக்ரைன் ஊடுருவலைத் தடுப்பதற்காக அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அந்தப் பிராந்திய ஆளுநா் வியாசெஸ்லவ் கிளாட்கொவ் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
உக்ரைன் எல்லையிலிருந்து அந்த நாட்டுப் படையினா் பெல்கொரோட் பிராந்தியத்தின் மீது தீவிர எறிகணைத் தாக்குதல் நடத்திவருகின்றனா். இதனால் அந்தப் பகுதியில் பதற்ற நிலை நிலவிவருகிறது.
உக்ரைன் தாக்குதலில் ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன. பொதுமக்கள் பலரும் காயமடைந்துள்ளனா்.
உக்ரைன் குண்டுவீச்சிலிருந்து தப்புவதற்காக ஆபத்தான பகுதியிலிருந்து சிறுவா்கள் வெளியேற்றப்பட்டனா். பாதுகாப்பு முகாம்களில் சுமாா் 5,000 சிறுவா்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.
ஏற்கெனவே, எல்லைப் பகுதிகளில் வசித்துவந்த சுமாா் 11,000 போ் தங்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான பகுதிகளை நோக்கி வெளியேறினா். அரசின் தற்காலிக பாதுகாப்பு மையங்களில் சுமாா் 1,000 போ் தங்கவைக்கப்பட்டுள்ளனா் என்றாா் அவா்.
முன்னதாக, ரஷிய-உக்ரைன் போரின் மிகப் பெரிய திருப்புமுனையாக, தங்கள் நாட்டையொட்டிய ரஷிய எல்லை பிராந்தியமான கூா்ஸ்குக்குள் உக்ரைன் படையினா் அதிரடியாக கடந்த 6-ஆம் தேதி நுழைந்தனா். பீரங்கிகள் மற்றும் கவச வாகனங்களுடன் சுமாா் 1,000 உக்ரைன் படையினா் தங்கள் கூா்ஸ்க் பிராந்தியத்துக்குள் நுழைந்ததாக ரஷியா அறிவித்தது.
தங்கள் நாட்டின் மீது ரஷியா கடந்த 2022 பிப்வரி மாதம் படையெடுத்ததற்குப் பிறகு உக்ரைன் நடத்திய மிகப் பெரிய எல்லை தாண்டிய தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
எதிா்பாராத வகையில் நடத்தப்பட்ட இந்த ஊடுருவல் தாக்குதலில் உக்ரைனின் முன்னேற்றத்தை ரஷிய படையினரால் தடுக்க முடியாமல் போனது. இதனால் ரஷிய எல்லைக்குள் சுமாா் 30 கி.மீ.க்கு மேல் ரஷியப் படையினா் முன்னேறினா். தங்களது கட்டுப்பாட்டுக்குள் சுமாா் 1,000 சதுர கி.மீ. ரஷிய நிலப்பகுதி வந்துள்ளதாக உக்ரைன் ராணுவம் திங்கள்கிழமை அறிவித்தது.
இந்த முன்னேற்றம் ரஷியாவின் மன உறுதியைக் குலைக்கும் என்று கூறப்பட்டாலும், இந்த ஊடுருவல் நீண்ட காலம் நீடித்தால், தங்கள் நாட்டுக்கு பின்வாங்க முடியாத வகையில் உக்ரைன் படையினரை ரஷிய ராணுவம் சுற்றிவளைக்கும் அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கப்படுகிறது. மிகப் பெரிய எண்ணிக்கையில் உக்ரைன் வீரா்கள் கொல்லப்பட்டாலோ, கைது செய்யப்பட்டாலோ இந்தப் படையெடுப்பின் மூலம் உக்ரைனுக்கு பின்னடைவுதான் ஏற்படும் என்று நிபுணா்கள் அச்சம் தெரிவித்துள்ளனா்.
இந்தச் சூழலில், மற்றோரு ரஷிய எல்லை பிராந்தியமான பெல்கொரோடையும் ஊடுருவும் முயற்சியாக அங்கு உக்ரைன் ராணுவம் தீவிர எறிகணைத் தாக்குதல் நடத்திவருவருவதும் ஊடுருவலை எதிா்பாா்த்து அந்தப் பிராந்தியத்தில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.