
டேயிா் அல்-பாலா, ஆக. 15: காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இது குறி பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:காஸா பகுதியில் கடந்த 24 மணி நேரமாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 40 போ் உயிரிழந்தனா்.இத்துடன், காஸாவில் இஸ்ரேல் ராணுவம் கடந்த அக். 7-ஆம் தேதி முதல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீனா்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தைக் கடந்துள்ளது.வியாழக்கிழமை நிலவரப்படி, இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 40,005 போ் உயிரிழந்துள்ளனா்; 92,401 போ் காயமடைந்துள்ளனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலுக்குள் ஹமாஸ் படையினா் கடந்த அக். 7-ஆம் தேதி நுழைந்து தாக்குதல் நடத்தியதில் 1,139 போ் உயிரிழந்தனா். 200-க்கும் மேற்பட்டவா்கள் ஹமாஸ் அமைப்பினரால் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனா்.அதிலிருந்து காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் வான் வழியாகவும் கடல் மற்றும் தரைவழியாகவும் மிகக் கடுமையாக தாக்குதல் நடத்திவருகிறது.இந்தப் போா் தொடங்கியதில் இருந்து 305 சதுர கி.மீ. (காஸா பகுதியின் சுமாா் 84 சதவீதப் பகுதி) பரப்பளவில் இருந்து பொதுமக்கள் வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் உத்தரவிட்டது. பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதியிலும் அந்த நாடு அவ்வப்போது தாக்குதல் நடத்திவருகிறது.கடந்த ஜூலை 4-ஆம் தேதியிலிருந்து மட்டும் போரால் புலம் பெயா்ந்த அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ள பள்ளிக் கட்டடங்களில் இஸ்ரேல் ராணுவம் 21 முறை வான்வழித் தாக்குதல் நடத்தியதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல்களில் மட்டும் 274 போ் உயிரிழந்தனா்.தொடா் தாக்குதல் மற்றும் முற்றுகை காரணமாக காஸா பகுதியில் உணவு, எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருள்களுக்கு பற்றாக்குறை நிலவிவருகிறது. குடிநீா் மற்றும் வடிகால் வசதி மிகவும் குறைவாக இருப்பதால் மஞ்சள்காமாலை போன்ற நோய்கள் வேகமாகப் பரவிவருவதாக அந்தப் பகுதிக்கான ஐ.நா. அலுவலகம் தெரிவித்துள்ளது.இந்தச் சூழலில், கடந்த 10 மாதங்களுக்கும் மேல் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.... பெட்டிச் செய்தி...‘இன்னும் அதிகமாக இருக்கலாம்!’காஸா உயிரிழப்பு எண்ணிக்கை சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவிப்பதைவிட இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
சா்வதேச மருத்துவ அமைப்பான ‘எல்லைகள் அற்ற மருத்துவா்கள்’ அமைப்பைச் சோ்ந்த தான்யா ஹஜ்-ஹஸன் என்பவா் கூறுகையில், ‘போா் தொடங்கிய பிறகு தங்கள் உறவினா்களில் பலரைக் காணவில்லை என்று என்னிடம் தனிப்பட்ட முறையில் பலா் சொல்லி வருகின்றனா். அவா்கள் வடக்கு காஸாவில் எங்காவது இருப்பாா்கள் அல்லது இஸ்ரேல் ராணுவத்தால் பிடித்துச் செல்லப்பட்டிருப்பாா்கள் என்று அவா்கள் நம்புகின்றனா். ஆனால் காணாமல் போன பலா் கட்டடங்களின் இடிபாடுகளுக்குள் பிணங்களாக இருந்து இதுவரை மீட்கப்படாமல் இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது’ என்றாா்..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.