சூடானில் பெய்துவரும் கனமழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 114 பேர் உயிரிழந்துள்ளதாக சூடான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சூடான் நாட்டில் பருவமழை ஜூனில் தொடங்கி செப்டம்பா் வரை நீடிக்கும். ஆகஸ்ட், செப்டம்பரில் அது அதிகபட்ச அளவை எட்டும். இந்தச் சூழலில், நடப்பாண்டு பருவமழையினால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து பல மாநிலங்களிலும் மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக ஆங்காங்கே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் 10 மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
சுகாதார அமைச்சகத்தின் அறிக்கைப்படி,
நாட்டில் பெய்துவரும் கனமழை, வெள்ளத்துக்குப் பலி எண்ணிக்கை 114 ஆக உயர்ந்துள்ளன. 281 பேர் காயமடைந்துள்ளனர்.
கனமழைக்கு இதுவரை 27,278 குடும்பங்களும், 1,10,278 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் முழுமையாக இடிந்துள்ளதாகவும், 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் ஒரு பகுதி இடிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 832 சதுர கி.மீ விவசாய நிலங்கள் சேதடைந்துள்ளன. அதே நேரத்தில் ஏராளமான விலங்குகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
ஆண்டுதோறும் ஜூன் முதல் அக்டோபர் மாதங்களில் கனமழை பெய்து வருகின்றது. கடந்த மூன்று ஆண்டுகளாக பெய்த கனமழையால் நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகியுள்ளதுடன், ஏராளமான விவசாய நிலங்கள் நாசமாகியுள்ளன.
சூடானில் இருந்து தோராயமாக 2.2 மில்லியன் பேர் வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.