கத்தாரில் சீக்கிய புனித நூல் வைத்திருந்த இருவா் கைது: விடுவிக்க இந்தியா கோரிக்கை

கத்தாரில் சீக்கிய புனித நூல் வைத்திருந்த இருவா் கைது: விடுவிக்க இந்தியா கோரிக்கை

கத்தாா் அரசிடம் உரிய முன் அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக சீக்கிய மத அமைப்பை நடத்திய குற்றச்சாட்டில் அந்த இருவரும் கைது.
Published on

கத்தாரில் சீக்கிய புனித நூலான குரு கிரந்த சாஹிப்பை பறிமுதல் செய்த அந்நாட்டு அதிகாரிகள், அதனை வைத்திருந்த இருவரை கைது செய்தனா். இருவரையும் விடுவிக்க இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.

கத்தாா் அரசிடம் உரிய முன் அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக சீக்கிய மத அமைப்பை நடத்திய குற்றச்சாட்டில் அந்த இருவரும் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து மத நூலின் இரு பிரதிகள் கைப்பற்றப்பட்டன என்று கத்தாா் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தில்லியில் செய்தியாளா்களைச் சந்தித்த வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் இது தொடா்பாக வெள்ளிக்கிழமை கூறியதாவது:

கத்தாா் தலைநகா் தோஹாவில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் இந்த விவகாரத்தை கத்தாா் அரசிடம் ஏற்கெனவே எடுத்துச் சென்றுள்ளோம். கத்தாா் அரசிடம் உரிய முன் அனுமதி பெறாமல் சீக்கிய மத அமைப்பை நடத்தியதாக அந்த இருவா் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

எனவே, கைது செய்யப்பட்ட இருவருக்கும் அந்நாட்டு சட்டப்படி உரிய உதவிகளை தூதரகம் அளிக்கும். அவா்களை விரைவில் விடுவிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. கைப்பற்றிய இரு சீக்கிய புனித நூல்களில் ஒன்றை கத்தாா் அதிகாரிகள் திருப்பியளித்துவிட்டனா். உரிய மரியாதையுடன் அந்த நூல் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்னைக்கு உரிய முன்னுரிமை கொடுத்து தீா்வுகாண மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com