சமூக வலைதளங்களில் ஒன்றான டெலிகிராம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநரும், நிறுவனருமான பாவெல் துரோவ் பாரீஸில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, டெலிகிராம் தளத்துக்கு சிக்கல் எழுந்தது.
டெலிகிராம் தளத்தை போதைப்பொருள் கடத்தல் மற்றும் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல் புகைப்படங்களைப் பரப்புவது போன்ற சமூக விரோத செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்ததன் அடிப்படையில் இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
டெலிகிராம் தளத்தைப் பற்றி பலரும் அறிந்திருப்பார்கள். அதன் நிறுவனர் பாவெல் துரோவ், ரஷியாவில் பிறந்தவர். தனது குழந்தைப் பருவத்தை இத்தாலியில் கழித்தவர், பிரான்ஸ், ரஷியா, கரீபிய தீவுகளான செயின்ட் கிட்ஸ் மற்றும் நேவிஸ் மட்டுமல்லாமல், ஐக்கிய அரபு நாடுகளிலும் குடியுரிமை பெற்றவர்.
இவர் அஜர்பைஜானிலிருந்து பிரான்ஸ் வந்தபோது, கடந்த சனிக்கிழமை பாரீஸ் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு, நான்கு நாள்கள் விசாரணைக்கு உள்படுத்தப்பட்ட பிறகு விடுதலை செய்யப்பட்டார். இவர் ஐந்து மில்லியன் யூரோக்கனை பிணைத் தொகையாக செலுத்தவும், இரண்டு வாரத்துக்கு ஒரு முறை காவல்நிலையம் வந்து செல்லவும் பாரீஸ் நீதிமன்றத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை குறித்து டெலிகிராமில் பதிவிட்டிருப்பதாவது, ஐக்கிய ஐரோப்பிய சட்டங்களுக்கு கட்டுப்படுவதாகவும், அதன் உள்ளடக்கம் "தொழில் தரம் மற்றும் தொடர்ந்து அது மேம்படுத்தப்பட்டு வருவதாகவும்" குறிப்பிட்டுள்ளது. மேலும், "ஐரோப்பாவுக்கு அடிக்கடி பயணம் மேற்கொள்வதில், மறைக்க எதுவும் இல்லை" என்றும் பதிவிடப்பட்டுள்ளது.
துரோவ் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், டெலிகிராம் செயலி குறித்த பின்னணி!
டெலிகிராம் என்பது ஒருவருடன் ஒருவர் உரையாடல் மேற்கொள்ள, குழு அரட்டைகள், பெரிய "சேனல்கள்" அதிக நபர்களை ஒரு குழுவில் அனுமதித்து அதன் மூலம் தகவல்களை பகிர்வதற்கான ஒரு தளமாக செயல்படுகிறது.
டெலிகிராமில், மக்கள் ஒரு சேனலுக்கு சப்ஸ்கிரைப் செய்வதன் மூலம், அதில், அந்த சேனல் தகவல்கள் அல்லது செய்திகளை ஒளிபரப்ப முடியும்.
மெட்டாவின் வாட்ஸ்அப் போன்ற போட்டியாளர்களைப் போல் அல்லாமல், டெலிகிராமின் குழு அரட்டைகள் 200,000 பேர் வரை அனுமதிப்பது இதன் சிறப்பம்சமாகக் கூறப்பட்டுது.
இதுவே வாட்ஸ்ஆப் என்று எடுத்துக்கொண்டால், அதிகபட்சமாக 1,024 பேர் மட்டுமே ஒரே நேரத்தில் குழு அரட்டையில் இணைய முடியும்.
இந்த நிலையில்தான், டெலிகிராம் அதிக அளவிலானோர் பங்கேற்கும் குழு அரட்டைகளில் தவறான தகவல்கள் எளிதில் பரவுவதாக நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
டெலிகிராம் பயனர்களுக்கு அவர்களின் தகவல்தொடர்புகளுக்கு எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனை வழங்குகிறது, ஆனால் இந்த வசதி தானாகவே இயங்காது, பயனர்கள் தேவை என்று நினைத்தால் அவர்களது டெலிகிராம் சேனலில் வைத்துக்கொள்ளலாம். அதேவேளையில், இது குழு அரட்டைகளின்போது பயன்படாது.
இது சிக்னல் மற்றும் ஃபேஸ்புக் மெசஞ்சர் போல அல்லாமல், எதிராக செயல்படுகிறது. காரணம், பேஸ்புக் மெசஞ்சரில் அரட்டைகளின்போது என்க்ரிப்ட் செய்யப்படுகின்றன.
குழு அரட்டைகள் மற்றும் சேனல்கள் போன்ற டெலிகிராம் தளத்தின் புகழ்பெற்ற அம்சங்கள் அனைத்துமே என்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்படவில்லை. அதாவது டெலிகிராம் நிறுவனத்தால், அவற்றின் உள்ளடக்கங்களை அறிய முடியும் என்று டொராண்டோவின் சிட்டிசன்லாப் பல்கலைக்கழகத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் ஜான் ஸ்காட்-ரெயில்டன் கூறுகிறார். டெலிகிராமின் 'ரகசிய அரட்டை' வசதி மட்டுமே என்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்டுள்ளது.
டெலிகிராம் செயலி, 95 கோடிக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. உலகிலேயே, பிரான்ஸ் நாட்டில் இந்த செயலி, அதிகம் பேரால் பயன்படுத்தப்படுவதாகவும, குடியரசுத் தலைவர் மாளிகையில் பணியாற்றும் அதிகாரிகள் பலரும் இதனைப் பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான், இந்த செயலியை சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடும் பயங்கரவாதிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் பயன்படுத்தியதாக பிரெஞ்சு புலனாய்வு அமைப்புகள் கண்டுபிடித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்த 2013ஆம் ஆண்டு துரோவ் மற்றும் அவரது சகோதரர் நிகோலாய் இணைந்து டெலிகிராமை அறிமுகப்படுத்தினர்.
டெலிகிராம் செயலியை உருவாக்குவதற்கு முன், துரோவ் ரஷியாவின் மிகப்பெரிய சமூக வலைப்பின்னலான விகோன்டாக்டே என்ற செயலியை நிறுவினார்.
ஆனால், 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டின் இறுதியில் மாஸ்கோவை உலுக்கிய மிகப்பெரிய மக்கள் போராட்டத்துக்குப் பிறகு ரஷிய அரசின் ஒடுக்குமுறைக்கு நிறுவனம் ஆளானது. அதன்பிறக, 2013 ஆம் ஆண்டு உக்ரைனில் நடந்த கிளர்ச்சியில் பங்கேற்ற பயனர்களின் தனிப்பட்ட தரவுகளை ஒப்படைக்குமாறு நிறுவனத்திடம் கோரப்பட்டது.
ஆனால் துரோவ் 2014-ல் ரஷிய அதிகாரிகளின் அழுத்தத்திற்குப் பிறகு விகோன்டாக்டே நிறுவனத்தில் இருந்த தனது பங்குகளை விற்றுவிட்டு, அவரும் நாட்டை விட்டு வெளியேறினார்.
இன்று, துபையில் தலைமை அலுவலகத்தைக் கொண்டு டெலிகிராம் செயலி இயங்கி வருகிறது. இதற்கிடையே டக்கர் கார்ல்சன் ஏப்ரல் மாதம் நடத்திய நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடுநிலையான தளத்துக்கு சிறந்த தேர்வாக டெலிகிராம் இருப்பதாக துரோவ் பேசியிருந்தார்.
துரோவ் கைது ஏன்?
சமூகவிரோதச் செயல்களைச் செய்ய டெலிகிராம் மூலம் அனுமதித்ததற்காக துரோவ் மீது பிரான்ஸ் அதிகாரிகள் முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்தனர், மேலும், தொடர் விசாரணை முடியும் வரை, பிரான்ஸிலிருந்த வெளியேறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் செய்யும் புகைப்படங்களை பகிர்வது, போதைப் பொருள் கடத்தலுக்கு உதவும் தளமாக டெலிகிராம் இருந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும், சட்டத்துறையால் சில தகவல்கள் மற்றும் ஆவணங்கள் கோரப்பட்டபோது, அதனை டெலிகிராம் கொடுக்க மறுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
முதற்கட்டமாக, சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனைகளுக்கு வழி வகுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் 5 லட்சம் யூரோ அபராதமாக விதிக்கப்படும் என்றும் வழக்குரைஞர்கள் அலுவலகம் தெரிவித்துள்ளது.
முதற்கட்ட தகவல் பதிவு என்றால், பிரான்ஸ் நாட்டைப்பொறுத்தவரை, குற்றம் நடந்திருக்கிறது என்பதற்கான ஆதாரங்களை ஏற்றுக்கொண்டு, நீதிபதி, அடுத்தக்கட்ட விசாரணையைத் தொடர்வதற்கு கால அவகாசம் அளிப்பதாகும்.
துரோவ் கைதுக்கு ரஷிய அரசு அதிகாரிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது அரசியல் உள்நோக்கம் கொண்ட நடவடிக்கை என்றும் தங்களது கண்டனத்தில் கூறியிருக்கிறார்கள்.
மற்ற தளங்களை ஒப்பிடுகையில், டெலிகிராம் பாதுகாப்புக் குறைபாட்டைக் கொண்டிருப்பதாகவும், விதிமுறைகளில் தளர்வு மற்றும் சட்டவிரோத கருத்தாக்கங்களுக்கு இடமளிப்பதாகவும் பிரான்ஸ் அரசு தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்துள்ளது.
முன்னதாக, 2022ஆம் ஆண்டே, ஜெர்மனி நாட்டு விதிகளுக்கு எதிராக செயல்படுவதாக, டெலிகிராம் நிறுவனத்துக்கு 5 மில்லியன் டாலர்கள் அபராதமாக விதிக்கப்பட்டது. இதுபோல கடந்த நவம்பர் மாதம் பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், நாஜி ஆதரவாளர்கள் குறித்த தகவல்களை ஒப்படைக்கத் தவறியதற்காக, பிரேசில், கடந்த ஆண்டு டெலிகிராமுக்கு தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.