என் தொலைபேசி எண்ணைத் துண்டிக்கவிருக்கிறேன்!: எலான் மஸ்க்

தனது தொலைபேசி எண்ணை முழுவதுமாக துண்டிக்கவிருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். 
என் தொலைபேசி எண்ணைத் துண்டிக்கவிருக்கிறேன்!: எலான் மஸ்க்

உலகின் முதன்மைத் தொழிலதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்களில் முக்கியமானவரான எலான் மஸ்க் தனது தொலைபேசி எண்ணைத் துண்டிக்கப்போவதாகத் தெரிவித்துள்ளார். 

டெஸ்லா, நியூரோ லிங்க், ஸ்பேஸ் எக்ஸ் போன்ற உச்சம் தொட்ட நிறுவனங்களின் நிறுவனரான எலான் மஸ்க் தனது தொலைபேசி எண்ணைத் துண்டித்துவிட்டு, குறுஞ்செய்தி மற்றும் அழைப்புகளுக்கு தனது எக்ஸ் தளத்தை மட்டுமே உபயோகிக்கவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர் 'இன்னும் சில மாதங்களில் என்னுடைய தொலைபேசி எண்ணைத் துண்டித்துவிட்டு, எக்ஸ் தளத்தை குறுஞ்செய்தி மற்றும் அழைப்புகளுக்கு பயன்படுத்தவிருக்கிறேன்' என அவர் கூறியிருக்கிறார். 

எலான் மஸ்க் எப்போதும் தனது நிறுவனங்கள் மீதும், தான் முதலீடு செய்யும் நிறுவனங்கள் மீதும் அதீத நம்பிக்கை செலுத்துபவர். உலகமே சிரிக்கும்படியான படுதோல்விகளைச் சந்தித்தபின்னும் இப்போது காரில் துவங்கி, விண்வெளிவரை இவரது நிறுவனங்கள் பெயர் பதித்துள்ளது. 

யூத வெறுப்புக் கருத்தைத் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டதைத் தொடர்ந்து பல நிறுவனங்கள் எக்ஸ் தளத்தில் தங்கள் விளம்பரங்களை நிறுத்திக்கொண்டன. இதனால் இந்த நிறுவனம் கடும் நிதியிழப்புகளைச் சந்தித்தது.

'எக்ஸ் தளம் முடங்கினால், அதற்குக் காரணம் விளம்பரங்களை நிறுத்திக்கொண்ட நிறுவனங்கள்தான்' என எலான் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இப்போது இதுபோன்ற அறிவிப்புகள் மூலம் மஸ்க் எக்ஸ் தளத்தை பிரபலப்படுத்த முயல்கிறார் என்ற கருத்துக்கள் வலைதளத்தில் வலம் வருகின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com