பாலஸ்தீனத்தில் தேசிய ஒற்றுமை அரசு: ரஷியாவில் இன்று பேச்சு

பாலஸ்தீனத்தில் தேசிய ஒற்றுமை அரசு: ரஷியாவில் இன்று பேச்சு
Published on
Updated on
2 min read

காஸா போர் முடிவுக்குப் பிறகு பாலஸ்தீனப் பகுதியில் தேசிய ஒற்றுமை அரசை அமைப்பது தொடர்பாக ஹமாஸ் மற்றும் ஃபட்டா அமைப்பின் பிரதிநிதிகள் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் வியாழக்கிழமை (பிப். 29)பேச்சு வார்த்தை நடத்துகின்றனர்.

இது குறித்து ரஷிய அரசுக்குச் சொந்தமான ஆர்ஐஏ நொவோஸ்தி செய்தி நிறுவனம் புதன்கிழமை கூறியதாவது:

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் ஆட்சி செலுத்தி வரும் ஹமாஸ் அமைப்பு, மேற்குக் கரையின் ஒரு பகுதியை ஆண்டு வரும் ஃபட்டா அமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகள் மாஸ்கோவில் வியாழக்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

அதில், போருக்குப் பிறகு பாலஸ்தீன பகுதிகளில் தேசிய ஒற்றுமை அரசை அமைப்பது, போரால் பாதிக்கப்பட்ட காஸாவை மறுசீரமைப்பது உள்ளிட்டவை பற்றி இரு தரப்பினரும் ஆலோசனை நடத்துவார்கள் என்று ரஷியாவுக்கான பாலஸ்தீன தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தத் தகவலை ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் மிகயீல் போக்தனொவும் உறுதிப்படுத்தியுள்ளார் என்று அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு அரசைக் கலைக்க முடிவு செய்துள்ளதாக பாலஸ்தீன பிரதமர் முகமது ஷ்டய்யே திங்கள்கிழமை அறிவித்தார்.

இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையிலான போர் முடிந்த பிறகு பாலஸ்தீன பகுதிகளில் புதிய ஆட்சிக் கட்டமைப்பை உருவாக்குவதில் பாலஸ்தீனர்களிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதற்கு வசதியாக இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறினார்.

போருக்குப் பிந்தைய காஸாவின் ஆட்சிப் பொறுப்பில் தற்போதைய அதிபர் மஹ்மூத் அப்பாஸ் தலைமையிலான ஃபட்டா அமைப்பு முக்கியப் பங்கு வகிக்க வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது. அதற்கு ஏற்ற சூழலை உருவாக்குவதற்காக, தற்போதைய பாலஸ்தீன அரசில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அந்த நாடு வலியுறுத்தி வருகிறது.

அதன் விளைவாகவே தனது ராஜிநாமா அறிவிப்பை பிரதமர் முகமது ஷ்டய்யே வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சூழலில், காஸா போருக்குப் பிறகு பாலஸ்தீன பகுதிகளில் தேசிய ஒற்றுமை அரசை அமைப்பது குறித்து ஹமாஸ் மற்றும் ஃபட்டா அமைப்பினர் மாஸ்கோவில் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாலஸ்தீன அரசின் அதிபராக இருந்து வந்த யாசர் அராஃபத் கடந்த 2005-இல் இறந்ததற்குப் பிறகு அந்தப் பகுதியில் ஹமாஸ் அமைப்பு வேகமாக வளர்ச்சியடைந்து வந்தது. 2006-இல் நடைபெற்ற தேர்தலில் ஹமாஸ் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அந்த அமைப்புக்கும்,

ஃபட்டா கட்சிக்கும் இடையே மோதல் வெடித்தது. அந்த மோதலின் முடிவில், மேற்குக் கரை பகுதி ஃபட்டா அமைப்பின் கட்டுப்பாட்டிலும், காஸா பகுதி ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டிலும் வந்தன.

இதில் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுடன் தொடர் மோதலில் ஈடுபட்டு வந்தனர். அதன் உச்சகட்டமாக, இஸ்ரேலுக்குள் கடந்த அக். 7-ஆம் தேதி ஊடுருவிய அவர்கள், சுமார் 1,200 பேரை படுகொலை செய்தனர்.

அதையடுத்து, ஹமாஸ் அமைப்பை முற்றிலுமாக ஒழித்துக்கட்டுவதாக சூளுரைத்த இஸ்ரேல், காஸா பகுதியில் வான்வழியாகவும், தரைவழியாகவும் தாக்குதல் நடத்தி வருகிறது.

அந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சர்வதேச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் சூழலில், போருக்குப் பிந்தைய காஸா பகுதியின் ஆட்சிக்கட்டமைப்பு குறித்து தொடர்ந்து விவாதம் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, ஹமாஸ் மற்றும் ஃபட்டா அமைப்பினர் தற்போது மாஸ்கோவில் ஆலோசனை நடத்துகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com