தனிப்பட்ட குறுஞ்செய்திகளை அரசு கண்காணிக்கிறதா?

'நான் இந்த விமானத்தை வெடிக்க வைக்கப்போகிறேன்' எனக் கேலியாக நண்பர்களுக்கு மட்டும் அனுப்பிய தனிப்பட்ட குறுஞ்செய்தி, எப்படி இங்கிலாந்து பாதுகாப்பு அமைப்பால் பார்க்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது? 
தனிப்பட்ட குறுஞ்செய்திகளை அரசு கண்காணிக்கிறதா?

இந்திய வம்சாவழியைச் சேர்ந்த 18 வயது நபர் 2022ல் விமானத்தில் பயணிக்கும்போது 'இந்த விமானத்தை வெடிக்க வைக்கப்போகிறேன். நான் தாலிபானைச் சேர்ந்தவன்.' எனக் கேலியாக நண்பர்களுக்கு மட்டும் அனுப்பிய புகைப்படக் குறுஞ்செய்தியை எப்படி இங்கிலாந்து பாதுகாப்பு அமைப்பினர் கண்டறிந்து நடவடிக்கை எடுத்தனர் என்ற கேள்வி தற்போது வலைதளத்தில் விவாதமாகியுள்ளது. 

ஸ்னாப் சாட் (Snap chat) தளம் புகைப்படங்கள் மூலம் குறுஞ்செய்தி அனுப்பிக்கொள்ளப் பயன்படுகிறது. இந்த செயலி என்கிரிப்டட் (Encrypted) முறைப்படி குறுஞ்செய்திகளை அனுப்புகிறது. அதாவது அனுப்புனர் பெறுநரைத் தவிர வேறு யாராலும் இந்த குறுஞ்செய்திகளை இடைமறிக்க இயலாது என அந்நிறுவனம் தெரிவிக்கிறது. 

ஜூலை 2022-ல் அந்த நபர் தனது நண்பர்களுக்கு மட்டும் அனுப்பிய குறுஞ்செய்தியை இங்கிலாந்து பாதுகாப்பு அமைப்புகள் கண்டறிந்து ஸ்பெயின் அதிகாரிகளுக்குத் தெரிவித்தனர். பாதுகாப்பு கருதி ஸ்பெயினின் எஃப்-18 ரக போர் விமானம் அந்த நபரின் விமானத்தை தரையிறங்கும் வரை பின்தொடர்ந்தது.

தரையிறங்கியபின் விமானத்தில் தீவிர பரிசோதனை நடத்தப்பட்டது. அந்த குறுஞ்செய்தி அனுப்பியவரும் கைது செய்யப்பட்டார். இரண்டு நாள்களுக்குப் பின்னர் அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது. 

அவர் மீதான விசாரணை இன்று நிறைவுற்ற நிலையில், அவரை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. நீதிமன்ற விசாரணையின்போது எழுந்தே இதே கேள்வியில், விமான நிலைய வைஃபை சேவையால் அவரது குறுஞ்செய்தி இடைமறிக்கப்பட்டு அதனால் கசிந்திருக்கலாம் எனக் கூறப்பட்டது. ஆனால் விமான நிலையத்தில் செய்தித் தொடர்பாளர் 'அந்த அளவுக்கு திறன் கொண்ட வைஃபை இங்கு இல்லை' எனத் தெரிவித்துள்ளார். 

'கண்டறியமுடியாத காரணங்களால் இந்த குறுஞ்செய்தி இங்கிலாந்து பாதுகாப்பு தொழில்நுட்பத்தால் கண்டறியப்பட்டது' என நீதிபதி தனது தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளார். 

இதுகுறித்து எந்த கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை என ஸ்னாப் சாட் நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தனது நண்பர்கள் மட்டும் பார்க்கும் வகையில் இந்தக் குறுஞ்செய்தியை அவர் அனுப்பியிருப்பதால், பொதுமக்களை அச்சுறுத்த அவர் நினைக்கவில்லை என்பதும் அவர் விடுதலை செய்யப்பட்டதற்குக் காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் அந்த தனிப்பட்ட குறுஞ்செய்தியை அரசு எப்படி கண்டறிந்தது என்பது விடையளிக்கப்படாத கேள்வியாகவே உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com