ஹமாஸைவிட இஸ்ரேலைப் பார்த்துதான் அஞ்சுகிறோம்!: பிணைக்கைதிகள் பேசும் காணொலி

ஹமாஸ் அமைப்பு வெளியிட்டுள்ள புதிய காணொலியில், 3 பிணைக்கைதிகள் இஸ்ரேல் உடனே தாக்குதல்களை நிறுத்தவேண்டும் எனக் கூறியுள்ளனர். 
காணொலியில் இடம்பெற்ற மூன்று பெண்கள் | X
காணொலியில் இடம்பெற்ற மூன்று பெண்கள் | X

இஸ்ரேல் பிணைக்கைதிகள் மூன்று பேர் பேசும் புதிய காணொலி ஒன்றினை ஹமாஸ் அமைப்பு பகிர்ந்துள்ளது. அதில் பிணைக்கைதிகள் இஸ்ரேலின் மீது குற்றம்சாட்டும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அக்டோபர் 7-ல் ஹமாஸ் அமைப்பினரால் பிணைக்கைதிகளாகப் பிடித்துவரப்பட்டவர்களில் மூன்று பெண் கைதிகள் இந்தக் காணொலியில் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் இஸ்ரேலின் முயற்சிகளைக் குற்றம் சாட்டும் காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளன. 

டேனியல்லா கில்போவா, கரினா அரிவ், டோரோன் ஸ்டெய்ன்பிரீச் ஆகிய பெண்கள் அந்தக் காணொலியில் பேசியுள்ளனர். இரண்டு பெண்கள் தங்களை ராணுவ வீரர்களாக அடையாளம் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களையும், பிணைக்கைதிகளை மீட்கத் தகுந்த எந்த நடவடிக்கையையும் இஸ்ரேல் எடுக்கவில்லை என ஒரு பெண் கோவமாகப் பேசியுள்ளார். 

107 நாள்களாக பிணைக்கைதிகளாக இருப்பதாக அவர்கள் கூறுவதால் இந்தக் காணொலி கடந்த ஞாயிற்றுக்கிழமை எடுக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களால், துப்பாக்கிச்சூடுகள் மற்றும் குண்டு வெடிப்புகளுக்கு மத்தியில் உயிருக்குப்போராடி வருகிறோம் என ஒரு பெண் கோபமாகப் பேசியுள்ளார். 

'ஹமாஸை விட என் நாட்டைப் பார்த்தால்தான் எனக்கு இப்போது பயமாக உள்ளது' என ஒரு பெண் தெரிவித்துள்ளது. 

காஸாவில் நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களால், பாலஸ்தீன மக்களோடு பல பிணைக்கைதிகளும் இறக்கிறார்கள் என ஹமாஸ் அமைப்பு எச்சரிக்கை விடுத்தது. ஆனால் இஸ்ரேல் தன் தாக்குதல்களை நிறுத்தவில்லை. 

காஸா பகுதிக்குள் நடந்த துப்பாக்கிச் சண்டையில், வெள்ளைக் கொடியுடன், 'நாங்கள் தீவிரவாதிகள் இல்லை' எனக் கத்திய இஸ்ரேல் பிணைக்கைதிகள் மூன்று பேரை சந்தேகத்தின் பேரில் சுட்டுக்கொன்றது இஸ்ரேல். அதன் பின்னும் தாக்குதல்களை நிறுத்தவில்லை. காஸாவில் 22,000த்திற்கும் அதிகமான பாலஸ்தீன மக்களை கொலை செய்து வருகிறது இஸ்ரேல். 

இனப்படுகொலை குற்றங்களை இஸ்ரேல் உடனடியாக நிறுத்தவேண்டும், காஸாவிற்குள் மனிதநேய உதவிகளை அனுமதிக்க வேண்டும் என சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாப்பிரிக்கா இஸ்ரேலுக்கு எதிராக தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com