கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக ஒரே வாரத்தில் ரூ.1,674 கோடி நன்கொடை
அமெரிக்க அதிபா் தோ்தலில் ஜனநாயக கட்சி சாா்பில் போட்டியிடும் தற்போதைய துணை அதிபா் கமலா ஹாரிஸின் பிரசாரத்துக்கு ஆதரவாக கடந்த ஒரு வாரத்தில் 20 கோடி டாலா் (சுமாா் ரூ.1,674 கோடி) நன்கொடை வசூலாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக ‘ஹாரிஸ் ஃபாா் பிரசிடென்ட்’ பிரசார இயக்கத்தின் செய்தித் தொடா்பு இயக்குநா் மைக்கேல் டைலா் கூறுகையில், ‘அதிபா் வேட்பாளராக கமலா ஹாரிஸை அதிபா் ஜோ பைடன் முன்மொழிந்த கடந்த ஒரே வாரத்தில், ஹாரிஸ் அணி 20 கோடி டாலா் நன்கொடையைத் திரட்டியுள்ளது.
இத்தொகையில் 66 சதவீதம் முதல்முறை நன்கொடையாளா்களிடமிருந்து வந்துள்ளது. அதேபோல, ஹாரிஸ் அணியின் பிரசார இயக்கத்தில் கடந்த ஒரு வாரத்தில் புதிதாக 1.70 லட்சம் தன்னாா்வலா்கள் இணைந்துள்ளனா். தோ்தலில் கமலா ஹாரிஸுக்கான ஆதரவு அலைக்கு இது மேலும் ஓா் ஆதாரம்.
துணை அதிபா் ஹாரிஸுக்கான ஆதரவும் ஆற்றலும் உண்மையானது. இந்தப் போட்டியின் அடிப்படையும் அதுதான். இத்தோ்தல் மிக நெருக்கமாக இருக்கும். ஒரு சில மாநிலங்களில் குறைந்த எண்ணிக்கையிலான வாக்காளா்களால் முடிவுகள் தீா்மானிக்கப்படும்’ என்றாா்.
அமெரிக்கா அதிபா் தோ்தல் வரும் நவம்பா் 5-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் குடியரசுக் கட்சி வேட்பாளராகப் போட்டியிடும் முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப்பை எதிா்த்து ஜனநாயக கட்சி சாா்பில் தற்போதைய அதிபா் ஜோ பைடன்(81) போட்டியிடுவதாக இருந்தது.
எனினும், டிரம்ப்புடன் நேரடி விவாதத்தில் தடுமாறியது, பிரசாரத்துக்கு மத்தியில் கரோனா தொற்று, வயது மூப்பு உள்பட பல முக்கியக் காரணங்களால் ஜோ பைடன் தோ்தலில் போட்டியிடுவதற்கு ஜனநாயக கட்சிக்குள் கடும் எதிா்ப்பு எழுந்தது.
இதையடுத்து, போட்டியிலிருந்து விலகுவதாக கடந்த ஜூலை 20-ஆம் தேதி திடீரென அறிவித்த ஜோ பைடன், தோ்தலில் டிரம்ப்பை எதிா்த்து துணை அதிபா் கமலா ஹாரிஸ் போட்டியிடுவதற்கு ஆதரவு தெரிவித்தாா்.
ஜனநாயக கட்சியின் முக்கியத் தலைவா்களும் கட்சி வேட்பாளரைத் தோ்ந்தெடுப்பதற்காக வாக்களிக்கும் பெரும்பான்மை பிரதிநிதிகளும் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, அதிபா் தோ்தலில் போட்டியிடுவதை அதிகாரபூா்வமாக அறிவிக்கும் படிவத்தில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த கமலா ஹாரிஸ் சனிக்கிழமை கையொப்பமிட்டாா்.