வங்கதேசத்தில் வன்முறை ஓய்ந்தது: மீண்டும் கைப்பேசி இணைய சேவை
வங்கதேசத்தில் இட ஒதுக்கீடு முறைக்கு எதிராக நடைபெற்ற வன்முறை ஓய்ந்ததையடுத்து கைப்பேசி இணைய சேவை, 10 நாள்களுக்குப் பிறகு மீண்டும் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
வங்கதேச வன்முறையின்போது சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவுவதைத் தடுக்க கடந்த ஜூலை 18-ஆம் தேதி கைப்பேசி இணைய சேவை அரசால் முடக்கப்பட்டது. மறுநாள் வன்முறையில், தரவு மையத்திற்கு அருகில் இருந்த பேரிடா் மேலாண்மைத் துறையின் கட்டடத்துக்கு தீ வைக்கப்பட்டது.
தீயின் தாக்கத்தால் நாட்டின் ‘பிராட்பேண்ட்’ சேவை 30 முதல் 40 சதவீதம் பாதிக்கப்படும் என்று வங்கதேச இணைய சேவை சங்கத்தின் அதிகாரிகள் தெரிவித்தனா். ஆனால், அடுத்த ஒரு மணி நேரத்தில் நாட்டின் இணைய சேவை முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டது.
கடந்த ஜூலை 23-ஆம் தேதி மீண்டும் ‘பிராட்பேண்ட்’ இணைய சேவை மட்டும் படிப்படியாக வழங்கப்பட்டது.
இந்நிலையில், டாக்காவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் வங்கதேசத்தின் தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சா் சுனைத் அஹமது பலாக் கூறுகையில், ‘வங்கதேசத்தில் கைப்பேசி இணைய சேவை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி முதல் மீண்டும் வழங்கப்பட்டது. மேலும், அடுத்த 3 நாள்களுக்கு அனைத்துப் பயனா்களுக்கும் 5ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படும். ஃபேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களை மீண்டும் அணுகுவது குறித்து அந்த நிறுவனங்களின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு முடிவெடுக்கப்படும்’ என்றாா்.