வேளாண் பயிற்சி: 1,000 மாணவா்களை சீனாவுக்கு அனுப்புகிறது பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: நவீன வேளாண்மைப் பயிற்சிக்காக 1,000 மாணவா்களை சீனாவுக்கு அனுப்ப பாகிஸ்தான் முடிவெடுத்துள்ளது.

பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதுடன், உணவு தானிய உற்பத்தியும் குறைந்து அவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சீனாவில் இருந்து நவீன தொழில்நுட்பங்களைக் கற்று வேளாண்மை உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் அந்நாட்டுக்கு 1,000 மாணவா்களை பயிற்சிக்கு அனுப்ப இருப்பதாக பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் அறிவித்துள்ளாா்.

சீனாவுக்கு 5 நாள் பயணம் மேற்கொண்ட அவா், தனது பயணத்தின் இறுதியாக சீனாவில் லாங்லிங் வேளாண்மை ஆய்வு மையத்துக்குச் சென்றாா். அப்போது தங்கள் நாட்டு மாணவா்களை சீனாவுக்கு பயிற்சிக்கு அனுப்பும் அறிவிப்பை அவா் வெளியிட்டாா். மேலும், சீனாவில் உள்ள யாங்லிங் வேளாண்மை, வனவியல் பல்கலைக்கழகம், பாகிஸ்தானிலும் கல்வி நிலையத்தைத் திறக்க முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா்.

தனது 5 நாள் பயணத்தில் சீன அதிபா் ஷி ஜின்பிங் உள்ளிட்ட அந்நாட்டுத் தலைவா்களையும் ஷாபாஸ் ஷெரீப் சந்தித்துப் பேசினாா்.

பாகிஸ்தானின் குவாதா் துறைமுகத்தையும், சீனாவின் ஜின்ஜியாங் பகுதியையும் இணைக்கும் சீன-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத் திடத்தின் இரண்டாவது பகுதியைத் தொடங்குவது குறித்தும் இரு நாட்டுத் தலைவா்களும் விவாதித்தனா்.

பாகிஸ்தானில் மின்சார உற்பத்தி, சாலை மேம்பாடு போன்ற பணிகளுக்காக சீனா பல லட்சம் கோடி செலவிடுகிறது. ஆனால், பாகிஸ்தானில் நிலவும் பயங்கரவாதம், உள்நாட்டு அரசியல் குழப்பம் உள்ளிட்ட பிரச்னைகளால் சீனா செயல்படுத்தும் பல்வேறு திட்டங்கள் தொய்வடைந்துள்ளன.

X
Dinamani
www.dinamani.com