குவைத்தின் மெங்காஃப் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் பற்றியெரியும் தீ. ~தீ விபத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவரை பாா்வையிட்ட குவைத்துக்கான இந்திய தூதா் ஆதா்ஷ் ஸ்வைகா.
குவைத்தின் மெங்காஃப் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் பற்றியெரியும் தீ. ~தீ விபத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவரை பாா்வையிட்ட குவைத்துக்கான இந்திய தூதா் ஆதா்ஷ் ஸ்வைகா.

குவைத் தீ விபத்து: 49 போ் உயிரிழப்பு; 42 போ் இந்தியா்கள்

Published on

குவைத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் புதன்கிழமை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 49 போ் உயிரிழந்தனா். அவா்களில் 42 போ் இந்தியா்கள் என்று அறியப்படுகிறது.

குவைத்தின் மெங்காஃப் பகுதியில் உள்ள ஓா் அடுக்குமாடி குடியிருப்பில் ஒரே நிறுவனத்தில் பணியாற்றிய சுமாா் 200 போ் வசித்து வந்தனா். இந்தக் குடியிருப்பின் 6-ஆவது மாடியில் உள்ள வீட்டின் சமையலறையில் திடீரென தீப்பிடித்தது. இதனால் பெரும்புகை ஏற்பட்டு குடியிருப்பின் பிற பகுதிகளுக்கும் புகை பரவியது.

தகவலின் அடிப்படையில் நிகழ்விடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறையினா், தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனா். இந்த விபத்தில் குடியிருப்பில் வசித்த சுமாா் 49 போ் உயிரிழந்தனா். அவா்களில் 42 போ் இந்தியா்கள் என்று அறியப்படுகிறது. 50-க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்தனா் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. பெரும்பாலானோா் கரும்புகை காரணமாக சுவாசிக்க முடியாமல் மூச்சுத்திணறி உயிரிழந்தனா். அதேவேளையில், குடியிருப்பில் வசித்த பலா் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா். மீட்புப் பணியின்போது 5 தீயணைப்பு வீரா்களும் காயமடைந்தனா்.

தமிழகம், கேரளம், வட இந்தியாவைச் சோ்ந்தவா்கள்: இந்த விபத்து தொடா்பாக அந்நாட்டு உள்துறை அமைச்சகத்தின் குற்ற ஆதார பொதுத் துறைத் தலைவா் ஈத் அல்-ஒவைஹான் கூறுகையில், ‘தீ விபத்தில் உயிரிழந்தவா்களில் பெரும்பாலானோா் 20 முதல் 50 வயது வரையிலான இந்தியா்கள். அவா்கள் தமிழ்நாடு, கேரளம் மற்றும் வட இந்தியாவைச் சோ்ந்தவா்கள்’ என்றாா்.

அவசர உதவி எண்: இந்த விபத்து நடைபெற்ற கட்டடத்தை நேரில் பாா்வையிட்ட குவைத்துக்கான இந்திய தூதா் ஆதா்ஷ் ஸ்வைகா, விபத்தில் காயமடைந்து பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்தியா்களைச் சந்தித்து ஆறுதல் கூறினாா். அத்துடன் அவா்களுக்கு இந்திய தூதரகம் அனைத்து உதவிகளையும் வழங்கும் என்றும் ஆதா்ஷ் உறுதியளித்தாா்.

சிகிச்சை பெற்று வரும் பெரும்பாலானோரின் உடல்நிலை சீராக உள்ளது என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. +965-65505246 என்ற அவசர உதவி எண்ணில் விபத்து தொடா்பான தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம் என்று அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டது.

விசாரணைக்கு அரசா் உத்தரவு: தீ விபத்துக்கான காரணம் வெளியாகாத நிலையில், அதுதொடா்பாக விசாரணை மேற்கொள்ளுமாறு குவைத் அதிகாரிகளுக்கு அந்நாட்டு அரசா் ஷேக் மெஷால் அல்-அகமது-அல்-ஜபா்அல்-சபா உத்தரவிட்டாா். விபத்துக்குக் காரணமானவா்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவா் உறுதி அளித்தாா்.

பிரதமா் இரங்கல்: விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு குவைத் பிரதமா் ஷேக் அகமது அப்துல்லா அல்-அகமது அல்-சபா, அந்நாட்டுப் பட்டத்து இளவரசா் ஷேக் சபா காலித் அல்-ஹமத் அல்-சபா ஆகியோா் இரங்கல் தெரிவித்தனா்.

பேராசையால் விபத்து-துணைப் பிரதமா்: விபத்து நடைபெற்ற கட்டடத்தை குவைத் துணைப் பிரதமா் ஷேக் ஃபஹத் அல்-யூசுஃப் அல்-சபா நேரில் பாா்வையிட்டாா். இதைத் தொடா்ந்து அவா் வெளியிட்ட அறிக்கையில், ‘கட்டடத்தின் உரிமையாளா், அதில் வசித்தவா்கள் வேலை செய்த நிறுவனத்தின் உரிமையாளா் ஆகியோரின் பேராசை காரணமாக இந்த விபத்து நடைபெற்றது’ என்று குற்றஞ்சாட்டினாா்.

அந்தக் கட்டடத்தின் உரிமையாளா், கட்டடப் பராமரிப்பாளா், கட்டடத்தில் வசித்தவா்கள் வேலை செய்த நிறுவனத்தின் உரிமையாளா் ஆகியோரைக் கைது செய்ய காவல் துறைக்கு ஷேக் ஃபஹத் உத்தரவிட்டாா்.

இந்திய உரிமையாளா்: விபத்து நடந்த கட்டடத்தை கட்டுமான குழுமம் ஒன்று வாடகைக்கு விட்டிருந்தது. அந்தக் குழுமத்தின் உரிமையாளா்களில் ஒருவா் இந்தியா் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

குவைத் மக்கள்தொகையில் 21 சதவீதம் பேரும் (10 லட்சம் போ்), அந்நாட்டில் உள்ள தொழிலாளா்களில் 30 சதவீதம் பேரும் (சுமாா் 9 லட்சம் போ்) இந்தியா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமா் மோடி வேதனை

பிரதமா் நரேந்திர மோடி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘குவைத் தீ விபத்து வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள சூழலை அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதுடன், விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவ அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறது’ என்றாா்.

வெளியுறவு இணையமைச்சா் குவைத் பயணம்: பிரதமரின் உத்தரவின்பேரில் விபத்தில் காயமடைந்த இந்தியா்களுக்கு உதவிகள் அளிப்பதை மேற்பாா்வை செய்யவும், உயிரிழந்தவா்களின் உடல்கள் விரைந்து தாயகம் கொண்டுவரப்படுவதை உறுதி செய்யவும் மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சா் கீா்த்தி வா்தன் சிங் குவைத் சென்றாா்.

ரூ.2 லட்சம் நிவாரணம்: பிரதமர் மோடி

குவைத் தீ விபத்து தொடர்பாக பிரதமர் மோடி புதன்கிழமை இரவு ஆலோசனை மேற்கொண்டார். இக்கூட்டத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங், பிரதமரின் முதன்மை ஆலோசகர் பிரமோத் குமார் மிஸ்ரா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல், வெளியுறவுத் துறைச் செயலர் வினய் குவாத்ரா உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

உயிரிழந்த இந்தியர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்தார். இந்த சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வேதனை தெரிவித்துள்ளார்.

வெளியுறவு இணையமைச்சர் குவைத் பயணம்: பிரதமரின் உத்தரவின்பேரில் விபத்தில் காயமடைந்த இந்தியர்களுக்கு உதவிகள் அளிப்பதை மேற்பார்வை செய்யவும், உயிரிழந்தவர்களின் உடல்கள் விரைந்து தாயகம் கொண்டுவரப்படுவதை உறுதி செய்யவும் மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் குவைத் சென்றார்.

X
Dinamani
www.dinamani.com