
மெக்காவில் கடும் வெப்ப அலை வீசி வருவதன் காரணமாக ஹஜ் புனித பயணம் மேற்கொண்டு 550 பயணிகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் ஹஜ் புனித பயணம் மேற்கொள்வது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான ஹஜ் புனித யாத்திரை ஜூன் 14-ல் தொடங்கியது. தியாக திருநாளைக் கொண்டாடும் வகையில் சௌதி அரேபியாவிலுள்ள புனித நகரமான மெக்காவில் இந்தாண்டு 15 லட்சம் பேர் வரை திரண்டுள்ளனர்.
இஸ்லாமியர்களின் முக்கிய கடமைகளில் ஒன்று புனித மெக்காவுக்கு ஹஜ் யாத்திரை மேற்கொள்வது. ஆண்டுதோறும் வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான இஸ்லாமிய பக்தர்கள் மெக்கா, மதீனாவுக்கு புனித யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இந்தாண்டு சௌதி அரேபியாவில் கடும் வெப்பம் நிலவி வருகின்றது. வெப்ப தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறத. மெக்காவில் 50 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகியுள்ளது.
ஹஜ் புனித பயணம் மேற்கொள்பவர்கள் அதிகப்படியான வெப்பத்தின் காரணமாக நீர்ச்சத்து இழந்து பலியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிக வெப்பநிலை நிலவி வருவதன் காரணமாக அதனைத் தாக்குப்பிடிக்கும் வகையில் மக்கள் அதிகப்படியான நீர் பருகவும், தன்னை நீர்ச்சத்துடன் வைத்திருக்கவும் அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.
வெப்ப தாக்கத்தினை எதிர்கொள்ளக் கூடிய வகையிலான மருத்துவக் குழுவினர் உள்பட 1,600 ராணுவ வீரர்களை சௌதி ராணுவம் அனுப்பியுள்ளது. மேலும் அதிரடி குழுவினர் மற்றும் ஐந்து ஆயிரம் சுகாதார மற்றும் முதலுதவி தன்னார்வலர்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருப்பினும், ஹஜ் பயணத்தின்போது வெயில் தாங்க முடியாமல் இதுவரை 550 பயணிகள் இறந்துள்ளதாக அதிர்ச்சி தகவலினை பல்வேறு நாடுகளின் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 323 பேர் எகிப்தியர்கள் ஆவார்.
ஹஜ் கூட்ட நெரிசலின்போது பலத்த காயங்கள் ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்ததைத் தவிர மற்ற அனைவரும் வெப்பத்தின் தாக்கத்தால் இறந்துள்ளனர். 60 ஜோர்டானியர்கள் இறந்துள்ளனர். இறந்தவர்கள் பெரும்பாலானோர் வெப்பம் தொடர்பான பாதிப்புகளுக்கு ஆளானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெக்காவின் மிகப்பெரிய சவக்கிடங்கில் ஒன்றான அல்-முஜசெமில் உள்ள பிணவறையில் மொத்தம் 550 பேர் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மெக்காவில் உள்ள கிராண்ட் மசூதியில் திங்கள்கிழமை 51.8 டிகிரி செல்சியஸ் (125 பாரன்ஹீட்) வெப்பநிலை பதிவாகியுள்ளதாக சௌதி தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து ஜெட்டாவில் சௌதி அதிகாரிகளிடம் ஒருங்கிணைந்து செயல்பட்டு இறந்தவர்களின் உடல்களை ஜோர்டானுக்கு திரும்பக்கொண்டு வருவதற்கான பணிகளை ஜோர்டான் அரசு மேற்கொண்டு வருகிறது.
ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் அதிகப்படியான நீரிழப்பு ஏற்பாடாமல், வெப்பத்தில் இருந்து தன்னை தற்காத்துக்கொள்ளுமாறு அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.