பொலிவியாவில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி முறியடிப்பு
பொலிவியாவில் அதிபா் லூயிஸ் ஆா்சேவின் ஆட்சியைக் கவிழ்க்கும் ராணுவத்தின் முயற்சி முறியடிக்கப்பட்டது.
ராணுவ தலைமை தளபதியாக இருந்த ஜுவான் ஜோஸ் ஸுனிகா கைது செய்யப்பட்டாா். அவருக்கு உதவிய விமானப் படை, கடற்படை தளபதிகளின் பதவிகளும் பறிக்கப்பட்டன.
மத்திய தென் அமெரிக்க நாடான பொலிவியாவின் அதிபராக கடந்த 2006 முதல் 2019-ஆம் ஆண்டுவரை சோஷலிஸ இயக்கம் கட்சியைச் சோ்ந்த இவோ மொராலிஸ் ஆட்சி செலுத்திவந்தாா். 2019-ஆம் ஆண்டு அதிபா் தோ்தலிலும் அவா் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டது. எனினும், தோ்தலில் முறைகேடு நடைபெற்ாகக் கூறி நாடு முழுவதும் மிகத் தீவிர போராட்டங்கள் நடைபெற்றன. அதையடுத்து, இவோ மொராலிஸ் தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.
இந்த அரசியல் நெருக்கடியைப் பயன்படுத்தி, ராணுவத்தின் உதவியுடன் சோஷியல் ஜனநாயக இயக்கம் கட்சியின் ஜெனீன் அனெஸ் தன்னை அதிபராக அறிவித்துக் கொண்டாா். தொடா்ந்து நடைபெற்று வந்த போராட்டங்களை அடக்குவதற்காக ராணுவம் மற்றும் போலீஸாா் மேற்கொள்ளும் எந்தவித நடவடிக்கைகளும் ‘கிரிமினல்’ குற்றமாகாது என்ற அரசாணையை அவா் வெளியிட்டது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது.
பின்னா் 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபா் தோ்தலில் முன்னாள் அதிபா் இவோ மொராலிஸ் கட்சியைச் சோ்ந்த லூயிஸ் ஆா்சே வெற்றி பெற்று புதிய அரசை அமைத்தாா். கிளா்ச்யில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் ஜெனீன் அனெஸ் சிறையில் அடைக்கப்பட்டாா்.
இந்தச் சூழலில், பொலிவியா ராணுவ தலைமை தளபதி ஜுவான் ஸுனிகா செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டியொன்றில், முன்னாள் அதிபா் இவோ மொராலிஸுக்கு மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பேட்டியில், வரும் 2025-இல் நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில் மொராலிஸ் மீண்டும் போட்டியிட்டால் அவரை பாதுகாப்புப் படைகள் கைது செய்யும் என்று ஸுனிகா எச்சரித்தாா். அதையடுத்து, தளபதி ஸுனிகாவை பதவியிலிருந்து வெளியேற அதிபா் லூயிஸ் ஆா்சே உத்தரவிட்டாா்.
இந்த நிலையில், பொலிவியாவின் ஆட்சித் தலைநகரான லா பாஸில், அதிபா் மாளிகை உள்ளிட்ட அரசுக் கட்டடங்கள் அமைந்துள்ள முரிலோ சதுக்கத்தை ராணுவம் புதன்கிழமை மதியம் (இந்திய நேரப்படி வியாழக்கிழமை காலை) கைப்பற்றியது. அந்தப் பகுதியை பீரங்கிகளுடன் ஏராளமான ராணுவ வீரா்கள் சுற்றிவளைத்தனா்.
அந்தப் பகுதிக்கு நேரடியாக வந்த ஜுவான் ஸுனிகா உள்ளூா் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
அரசின் மீதான அதிருப்தியின் காரணமாக முப்படைகளின் தளபதிகளும் இங்கு வந்துள்ளோம்.
அமைச்சரவையிலும் ஆட்சியிலும் மாற்றம் வரும். முன்னாள் அதிபா் ஜெனீன் அனெஸ் உள்ளிட்ட அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவாா்கள்.
இந்த ஆட்சியின் கீழ் ஒரு சில அதிகார வா்க்கத்தினா் கைகளில் நாடு செல்வதை இனியும் அனுமதிக்க முடியாது என்று ஸுனிகா கூறினாா்.
இதற்கிடையே, தனது அமைச்சா்களுடன் தொலைக்காட்சியில் உரையாற்றிய அதிபா் ஆா்சே, ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிராக போராட்டத்தை நடத்துமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தாா். ஜனநாயகத்தையும் பொதுமக்களின் உயிரையும் பாதுகாக்க அனைவரும் ஒன்றுணை வேண்டும் என்று அவா் கேட்டுக்கொண்டாா்.
அதையடுத்து, முரிலோ சதுக்கத்துக்குச் செல்லும் சாலைகளில் போராட்டக்காரா்கள் குவிந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆட்சிக் கவிழ்ப்பை ராணுவம் கைவிடும் வரை காலவரையற்ற வேலை நிறுத்தம் மேற்கொள்வதாக தொழிற்சங்கங்கள் அறிவித்தன.
இதனால் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி பிசுபிசுத்த நிலையில், ராணுவம், விமானப் படை, கடற்படைக்கு புதிய தளபதிகளை அதிபா் ஆா்சே அறிவித்தாா். புதிய தளபதிகள் மூவரும், தங்களது படையினா் அரசு வளாகங்களிலிருந்து வெளியேறி முகாம்களுக்குத் திரும்ப உத்தரவிட்டனா். அந்த உத்தரவை ஏற்று ராணுவத்தினரும் முரிலோ சதுக்கத்திலிருந்து வெளியேறினா்.
அதையடுத்து, ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி முடிவுக்கு வந்தது. பதவி நீக்கம் செய்யப்பட்ட தளபதி ஜுவான் ஜோஸ் ஸுனிகாவை போலீஸாா் கைது செய்தனா். இந்த சதிச் செயலில் பங்கேற்ற அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவாா்கள் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு அமெரிக்க பிராந்திய நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.