காஸாவில் வான்வழியாக உணவுப் பொட்டலங்களை வீசியது அமெரிக்கா

போரால் பாதிக்கப்பட்டுள்ள காஸாவில் அமெரிக்கா வான்வழியாக நிவாரணப் பொருள்களை சனிக்கிழமை விநியோகித்தது.
காஸாவில் வான்வழியாக உணவுப் பொட்டலங்களை வீசியது அமெரிக்கா

சுமார் 5 மாதங்களாக நடத்தப்படும் குண்டுவீச்சு மற்றும் முற்றுகை காரணமாக கடுமையான பஞ்ச அபாயத்தை எதிர்நோக்கியிருக்கும் அந்தப் பகுதியில், உணவுப் பொருள்களை வாங்குவதற்காகக் காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில் இந்த நடவடிக்கையை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது.

இது குறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் கூறுகையில், காஸா பகுதியில் அமெரிக்க போர் விமானங்கள் 38,000 உணவுப் பொட்டலங்களை வான்வழியாக சனிக்கிழமை விநியோகித்தன.

அந்தப் பகுதி மக்களுக்கு அத்தியாவசிய நிவாரணப் பொருள்களை வான்வழியாக வழங்க அதிபர் ஜோ பைடன் அனுமதியளித்துள்ளார். அதன் முதல்கட்டமாக இந்த உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன என்று அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த அக். 7-இல் தங்கள் நாட்டுக்குள் நுழைந்து சுமார் 1,200 பேரை படுகொலை செய்த ஹமாஸ் அமைப்பினரை ஒழித்துக்கட்டுவதாகக் கூறி, காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் சுமார் 5 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது.

மேலும், உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களைக் கொண்டு செல்ல விடாமல் காஸா பகுதியை இஸ்ரேல் ராணுவம் முழுமையாக முற்றுகையிட்டது.

இது, ஹமாஸ் அமைப்பினர் செய்த தவறுக்காக காஸா பொதுமக்கள் அனைவருக்கும் அளிக்கப்படும் கூட்டு தண்டனை என்று ஐ.நா.வும், மனித உரிமை அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன.

குறிப்பாக, போரின் தொடக்கத்திலிருந்து வான்வழியாகவும், கடல் வழியாகவும் கடுமையான தாக்குதலுக்குள்ளான காஸா சிட்டி, முதல்முûறாக இஸ்ரேல் படையினரின் படையெடுப்புக்கு இலக்காக அமைந்தது.

இதனால் மிகப் பெரிய சேதத்தைச் சந்தித்துள்ள அந்த நகரில், நீண்டகாலத்துக்குப் பிறகு உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை ஏற்றிய வாகனங்கள் கடந்த வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டன.

அந்தப் பொருள்களை வாங்குவதற்காக காத்திருந்த பொதுமக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதாகவும், இதில் 115 பேர் உயிரிழந்ததாகவும் காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்தது.

தள்ளுமுள்ளு காரணமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலிலும், நிவாரணப் பொருள்களுடன் வந்த வாகனங்கள் ஏறியதாலும்தான் பொதுமக்கள் உயிரிழந்ததாக இஸ்ரேல் ராணுவம் கூறினாலும், தங்களது வீரர்களை அச்சுறுத்தும் வகையில் பொதுமக்கள் நெருங்கியதால் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக மற்றொரு பிரிவினர் ஒப்புக்கொண்டனர்.

இந்தச் சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொணர வேண்டும் என்று அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் உள்ளிட்ட இஸ்ரேலின் நெருங்கிய நட்பு நாடுகளே வலியுறுத்தியுள்ளன.

காஸா பகுதியில் அத்தியாவசிய நிவாரணப் பொருள்களின் உடனடி அவசியத்தை இந்தச் சம்பவம் உணர்த்துவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், வான்வழியாக அந்தப் பகுதியில் நிவாரணப் பொருள்களை அமெரிக்கா விநியோகித்துள்ளது.

காஸா உயிரிழப்பு 30,320-ஆக உயர்வு

காஸாவில் இஸ்ரேல் சுமார் 5 மாதங்களாக நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30,320-ஆக அதிகரித்துள்ளது.

இது குறித்து காஸா சுகாதாரத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை கூறியதாவது:

காஸாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 92 பேர் உயிரிழந்தனர்; 156 பேர் காயடைந்தனர் என்று தெரிவித்தனர்.

காஸாவில் வான்வழியாக உணவுப் பொட்டலங்களை வீசியது அமெரிக்கா
ஹூதிக்கள் தாக்குதல்: செங்கடலில் மூழ்கியது சரக்குக் கப்பல்

'பெரும்பாலானவர்கள் குண்டு பாய்ந்து காயம்'

நியூயார்க், மார்ச் 2: காஸா சிட்டியில் உதவிப் பொருள்கள் விநியோகத்தின்போது காயமடைந்தவர்களில் மிகப் பெரும்பாலானவர்கள் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

இது குறித்து ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீஃபன் துஜாரிக் கூறியதாவது:

காஸா சிட்டியில் நிவாரணப் பொருள் விநியோகத்தின்போது காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வரும்

மருத்துவமனைகளில் ஐ.நா. நிபுணர்கள் குழு ஆய்வு செய்தது.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த சுமார் 750 பேரில் 200 பேர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களிடம் ஆய்வு செய்ததில், மிகப் பெரும்பாலானவர்களுக்கு துப்பாக்கி குண்டு காயங்கள் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

அந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களில் ஐ.நா. குழுவினர் ஆய்வு செய்தனரா என்பது தெரியவில்லை. ஆனால், காயமடைந்தவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அவர்களில் ஏராளமானவர்கள் துப்பாக்கியால் சுடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது என்றார் அவர்.

போர்நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஒப்புதல்: அமெரிக்கா

காஸா போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஒப்புதல் அளித்திருப்பதாகவும், இது குறித்து ஹமாஸ் முடிவெடுக்க வேண்டுமெனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறுகையில், 'காஸாவில் 6 வார கால போர் நிறுத்தம் மற்றும் ஹமாஸ் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ள நோயாளிகள், காயமடைந்தவர்கள், முதியோர், பெண்களை விடுவித்தல் உள்ளிட்ட முன்மொழிவுகளை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக ஹமாஸ் முடிவெடுக்க வேண்டும்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com