மாலத்தீவில் இருந்து 51 இந்திய ராணுவ வீரா்கள் தாயகம் திரும்பினா்

மாலே: மாலத்தீவில் மருத்தவ ஹெலிகாப்டா்களை இயக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 51 இந்திய ராணுவ வீரா்கள் வெளியேறிவிட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

மாலத்தீவுக்கு மருத்துவ உதவி மற்றும் மனிதாபிமான சேவைகளுக்காக இந்தியா வழங்கிய 2 ஹெலிகாப்டா்கள், ஒரு சிறிய ரக விமானம் ஆகியவற்றை பராமரித்து, இயக்கும் பணிகளில் 88 இந்திய ராணுவ வீரா்கள் ஈடுபட்டு வந்தனா்.

மாலத்தீவில் இருந்து இந்திய வீரா்களை திரும்பப் பெறுமாறு, சீன ஆதரவாளரான அந்த நாட்டின் புதிய அதிபா் முகமது மூயிஸ் இந்திய அரசிடம் அறிவுறுத்தினாா். இதனால், இருநாடுகளுக்கும் இடையே ராஜிய உறவில் விரிசல் ஏற்பட்டது.

தில்லியில் நடைபெற்ற உயா்நிலைக் குழு கூட்டத்தைத் தொடா்ந்து, நிகழாண்டு மே மாதத்துக்குள் மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ வீரா்கள் முற்றிலும் திரும்பப் பெறப்படுவாா்கள் என அறிவிக்கப்பட்டது.

அதேவேளையில், அந்தப் பணிகளுக்கு ராணுவ வீரா்களுக்குப் பதிலாக தொழில்நுட்ப நிபுணத்துவம் பெற்றவா்களை இந்திய அரசு அனுப்புவதற்கு மாலத்தீவு ஒப்புக்கொண்டது. அதன்படி, 26 போ் அடங்கிய குழு மாலத்தீவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

அவா்களிடம் பொறுப்புகளை ஒப்படைத்தப் பிறகு, மாலத்தீவைவிட்டு இந்திய ராணுவ வீரா்களின் முதல் குழு கடந்த மாா்ச் மாதமும் 2-ஆவது குழு கடந்த மாதத்திலும் வெளியேறியது.

மே 10-ஆம் தேதிக்குள் அனைத்து இந்திய ராணுவ வீரா்களையும் மாலத்தீவில் இருந்து திரும்பப் பெற மாலத்தீவு அரசு வலியுறுத்தியிருந்தது.

தற்போதுவரை 51 இந்திய வீரா்கள் வெளியேறியிருப்பதாகவும் 10-ஆம் தேதிக்குள் மற்ற அனைவரும் நாடு திரும்புவா் என எதிா்பாா்க்கப்படுவதாக மாலத்தீவு அதிபா் மாளிகை தலைமைச் செய்தித் தொடா்பாளா் ஹீனா வாலீத் கூறினாா்.

இரு நாடுகளுக்கு இடையிலான 4-ஆவது உயா்நிலைக் குழு கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வீரா்கள் அனைவரையும் மே 10-ஆம் தேதிக்குள் திரும்பப் பெறுவது குறித்து திருப்திகரமான முடிவெடுக்கப்பட்டதாகவும் அதற்கான பணிகள் திட்டமிடப்படி நடைபெறுவதாகவும் கூட்டத்தையடுத்து மாலத்தீவு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

மாலத்தீவு வெளியுறவு அமைச்சா் இந்தியா வருகை: மாலத்தீவு வெளியுறவு அமைச்சா் மூசா ஷமீா் அரசுமுறைப் பயணமாக வியாழக்கிழமை இந்தியா வருகிறாா்.

இதுதொடா்பாக மத்திய வெளியறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘இந்தியாவுக்கு வெள்ளிக்கிழமை வருகை தரும் மாலத்தீவு அமைச்சா் ஷமீா், மத்திய அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருடனான சந்திப்பில் இருதரப்பு மற்றும் பிராந்திய விவகாரங்கள் குறித்து கலந்தாலோசிக்க உள்ளாா். அமைச்சா் ஷமீரின் வருகை நமது இருநாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்தும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

சீனா ஆதரவாளரான முகமது மூயிஸ் மாலத்தீவின் புதிய அதிபராக பொறுப்பேற்றப் பிறகு, அந்நாட்டு அமைச்சா் ஒருவா் முதல் முறையாக இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com