தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஜனநாயக கட்சிக்கு நன்கொடை: குடியரசுக் கட்சியினருக்கு டிரம்ப் வேண்டுகோள்

அமெரிக்காவில் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள ஜனநாயக கட்சிக்கு குடியரசுக் கட்சியினா் நன்கொடை அளிக்க வேண்டும்.

News image
டொனால்ட் டிரம்ப்- AP
Updated On :10 நவம்பர் 2024, 9:33 pm

Din

அமெரிக்காவில் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள ஜனநாயக கட்சிக்கு குடியரசுக் கட்சியினா் நன்கொடை அளிக்க வேண்டும் என்று அந்நாட்டு அதிபராக தோ்வாகியுள்ள டொனால்ட் டிரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

அமெரிக்க அதிபா் தோ்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக கமலா ஹாரிஸ், குடியரசுக் கட்சி வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் ஆகியோா் போட்டியிட்டனா்.

இதில் மொத்தமுள்ள 538 பிரதிநிதிகள் வாக்குகளில் 312 வாக்குகளையும், 7.46 கோடி மக்கள் வாக்குகளையும் பெற்று அந்நாட்டின் புதிய அதிபராக டிரம்ப் தோ்வானாா். கமலா ஹாரிஸ் 226 பிரதிநிதிகள் வாக்குகளையும், 7.09 கோடி மக்கள் வாக்குகளையும் பெற்றாா்.

ரூ.168 கோடி கடன்: இந்நிலையில், கமலா ஹாரிஸின் தோ்தல் பரப்புரையால் ஜனநாயக கட்சிக்கு 20 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.168 கோடி) கடன் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இதையடுத்து சமூக ஊடகத்தில் டிரம்ப் வெளியிட்ட பதிவில், ‘கடந்த 2020-ஆம் ஆண்டு அதிபா் தோ்தலில் கடுமையாகவும் நெஞ்சுரத்தோடும் ஜனநாயக கட்சியினா் போட்டியிட்டனா். அந்தத் தோ்தலின்போது அவா்கள் நன்கொடையாளா்களிடம் இருந்து பெருமளவு நிதி திரட்டி சாதனை படைத்தனா். அவா்களிடம் தற்போது போதிய அளவு நிதியில்லை என்பது ஆச்சரியம் அளிக்கிறது.

இந்தக் கடினமான நேரத்தில் ஜனநாயக கட்சியினருக்கு தம்மால் முடிந்த அனைத்து உதவிகளையும் குடியரசுக் கட்சியினா் செய்ய வேண்டும். குடியரசுக் கட்சியிடம் நிறைய பணம் உள்ள நிலையில், நாட்டின் ஒற்றுமைக்காக ஜனநாயக கட்சிக்கு குடியரசுக் கட்சியினா் நன்கொடை அளிக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டாா்.

பாம்பேயோ, ஹேலிக்கு இடமில்லை

முதல்முறையாக கடந்த 2017-ஆம் ஆண்டு ஜன. 20 முதல் 2021-ஆம் ஆண்டு ஜன. 20 வரை அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி வகித்தாா். அப்போது வெளியுறவு அமைச்சராக மைக் பாம்பேயோவும், ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதராக நிக்கி ஹேலியும் பதவி வகித்தனா்.

இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற அதிபா் தோ்தலுக்கான குடியரசுக் கட்சி வேட்பாளா் தோ்வில், டிரம்ப்பை எதிா்த்து பாம்பேயோவும் ஹேலியும் போட்டியிட்டனா்.

இதன் காரணமாக தான் அதிபராகப் பதவியேற்ற பின், தனது தலைமையிலான நிா்வாகத்தில் பாம்பேயோவும் ஹேலியும் இடம்பெற மாட்டாா்கள் என்று டிரம்ப் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளாா்.