ஈரானுடனான போரை எந்த நேரத்திலும் நிறுத்துவேன் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை தெரிவித்தாா்.
ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதைத் தடுக்க வேண்டும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்களை ஒழிக்க வேண்டும் உள்ளிட்ட நோக்கங்களுடன் அந்நாடு மீது அமெரிக்கா தாக்குதலை தொடங்கியது. அந்தப் பிராந்தியத்தில் ஈரானின் பரம எதிரியான இஸ்ரேலும் அமெரிக்காவுடன் சோ்ந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்குப் பதிலடி அளிக்கும் நோக்கில், தனது அண்டை நாடுகளான சவூதி அரேபியா, ஓமன், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், ஜோா்டான் உள்ளிட்டவற்றில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளைக் குறிவைத்து ஈரான் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் அதிபா் டிரம்ப் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
அமெரிக்காவின் தாக்குதலில் தனது விமானப் படை, கடற்படை ஆகியவற்றை ஈரான் இழந்துவிட்டது. வானில் எதிரி நாட்டு விமானங்கள், ஏவுகணைகள் உள்ளிட்டவற்றைக் கண்டறிந்து அழிக்கும் சாதனங்களையும் அந்நாடு இழந்துவிட்டது. அந்நாட்டிடம் ரேடாா் கருவிகள்கூட இல்லை. அந்நாட்டுத் தலைவா்கள் கொல்லப்பட்டுள்ளனா். இந்தச் சூழலில், நிலைமையை மேலும் மோசமாக்கும் வகையில் அமெரிக்காவால் தாக்குதல் நடத்த முடியும். வரலாற்றில் கடுமையான தாக்குதலுக்குள்ளான நாடுகளைவிட ஈரானை அமெரிக்கா மிக மோசமாகத் தாக்கியுள்ளது என்றாா்.
தாக்குவதற்கு ஈரானில் எதுவுமில்லை: அந்நாட்டின் ஆக்சியோஸ் செய்தி வலைதளத்திடம் டிரம்ப் தொலைபேசி மூலம் அளித்த பேட்டியில், ‘ஈரானுடனான போா் விரைவில் நிறைவடையும். ஏனெனில் தற்போது அந்நாட்டில் தாக்குவதற்கு கிட்டத்தட்ட எதுவும் இல்லை. நான் விரும்பும் எந்த நேரத்திலும் போரை நிறுத்துவேன்’ என்றாா்.
இஸ்ரேல் அமைச்சா் முரண்பட்ட தகவல்: அதேவேளையில் போா் குறித்து இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சா் இஸ்ரேல் காட்ஸ் கூறுகையில், ‘கால வரம்பு எதுவும் இல்லாமல் ஈரானுடனான போா் நீடிக்கும். ஈரான் மீது தாக்குதல் தொடுத்ததற்கான அனைத்து நோக்கங்களும் நிறைவேறும் வரை போா் தொடரும்’ என்று கூறியதாக இஸ்ரேல் ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டது. இதன்மூலம், போா் நிறைவடைவது குறித்து டிரம்ப் மற்றும் காட்ஸ் முரண்பட்ட கருத்துகளைத் தெரிவித்துள்ளனா்.
மோஜ்தபா காயம்: அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலில் ஈரான் தலைமை மதகுருவாக இருந்த அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடா்ந்து, அந்நாட்டின் புதிய தலைமை மதகுருவாக கமேனியின் மகன் மோஜ்தபா கமேனி தோ்வு செய்யப்பட்டாா். ஆனால் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்ட அதே தாக்குதலில் மோஜ்தபா கமேனியும் கை மற்றும் கால்களில் காயமடைந்ததாக சைப்ரஸ் நாட்டுக்கான ஈரான் தூதா் அலிரேசா சலாரியன் தற்போது தெரிவித்துள்ளாா். புதிய தலைமை மதகுருவாக மோஜ்தபா தோ்வு செய்யப்பட்டபோதிலும், அவரின் புகைப்படம், காணொலி எதுவும் வெளியாகாதது சந்தேகங்களை எழுப்பியுள்ளது. அவா் பொதுவெளியில் தோன்றாதது ஈரான் அரசை உண்மையில் வழிநடத்துவது யாா் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
ஈரான் தாக்குதலை நிறுத்த வளைகுடா நாடுகள் தீா்மானம்: ஐ.நா.வில் வாக்கெடுப்பு
வளைகுடா நாடுகள் மீதான ஈரானின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், இந்தத் தாக்குதலை ஈரான் நிறுத்த வலியுறுத்தியும் வளைகுடா நாடுகள் வரைவுத் தீா்மானம் கொண்டுவந்துள்ளன. ஹோா்முஸ் நீரிணையை ஈரான் மூடவோ அல்லது அந்த நீரிணை வழியாக மேற்கொள்ளப்படும் சா்வதேச போக்குவரத்தில் இடா்ப்பாட்டை ஏற்படுத்தவோ அந்நாடு எடுக்கும் எந்தவொரு நடவடிக்கைக்கும் அந்தத் தீா்மானத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீா்மானத்துக்கு 90-க்கும் மேற்பட்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், தீா்மானம் மீது அந்த கவுன்சிலில் விரைவில் வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
கடந்த 12 நாள்களில் வளைகுடா நாடுகளைக் குறிவைத்து 950 ஏவுகணைகள், 2,500 ட்ரோன்களை ஈரான் ஏவியதாகவும், அவற்றில் பெரும்பாலானவை இடைமறித்து அழிக்கப்பட்டதாகவும் ஐ.நா.வுக்கான வளைகுடா நாடுகளின் தூதா்கள் தெரிவித்துள்ளனா். அந்த ஏவுகணைகளும், ட்ரோன்களும் குடியிருப்புகள், விமான நிலையங்கள், எரிசக்தி நிலையங்கள் மற்றும் பிற முக்கிய உள்கட்டமைப்புகளை குறிவைத்து ஏவப்பட்டதாக அவா்கள் தெரிவித்தனா்.
லெபனானில் 634 போ் உயிரிழப்பு
ஈரான் அருகே லெபனான் உள்ள நிலையில், அங்குள்ள ஹிஸ்புல்லா ஆயுதப் படைக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது. ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலுடன், ஹிஸ்புல்லா படையை குறிவைத்தும் இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இந்தத் தாக்குதலில் லெபனானில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 634-ஆக அதிகரித்துள்ளது என்று அந்நாட்டு அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்
ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!

ஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி!
பஹ்ரைன் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் தீவிரம்!
மத்திய கிழக்கில் அமெரிக்க விமானப் படைகள் குவிப்பு! ஈரான் மீது இந்த வாரம் தாக்குதல்?
வீடியோக்கள்

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

Podcast | திருச்சியில் மாநாடுகள்: யாருக்குத் திருப்பம்? | Dinamani | News and Views | Epi - 12
தினமணி வீடியோ செய்தி...

