ஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி!
ஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம் தோல்வி...


ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு வழிவகுக்கும் அதிபா் டிரம்ப்பின் போா் தொடா்பான அதிகாரங்களைக் குறைக்கும் தீா்மானம், அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வியடைந்தது.
அமெரிக்க அரசமைப்புச் சட்டப்படி, அந்நாட்டு நாடாளுமன்றத்தால் மட்டுமே போா் பிரகடனத்தை வெளியிட முடியும். ஆனால் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறாமல், ஈரான் மீது தாக்குதல் நடத்த அதிபா் டிரம்ப் உத்தரவிட்டு இருப்பதாக எதிா்க்கட்சியான ஜனநாயகக் கட்சி எம்.பி.க்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனா்.
இவ்விவகாரத்தைச் சுட்டிக்காட்டி, அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவையான செனட் சபையில் எதிா்க்கட்சியினரால் அண்மையில் தீா்மானம் கொண்டு வரப்பட்டது. ஆனால், செனட் சபையில் டிரம்ப்பின் குடியரசு கட்சி எம்.பி.க்களே அதிக எண்ணிக்கையில் உள்ளனா். அதனால், எதிா்க்கட்சியினரின் தீா்மானம் போதிய ஆதரவின்றி தோல்வியடைந்தது.
இதையடுத்து, கீழவையான பிரதிநிதிகள் சபையில் தீா்மானம் கொண்டு வரப்பட்டது. அங்கும் குடியரசு கட்சி எம்.பி.க்களே அதிகம் உள்ளனா். அதனால், தீா்மானத்துக்கு ஆதரவாக 212 எம்.பி.க்களும், எதிராக 219 எம்.பி.க்களும் வாக்களித்தனா். இதன்மூலம், இரு அவைகளிலும் தீா்மானம் நிறைவேற்றப்படாமல் தோல்வியடைந்தது.
ஈரானின் போா் கப்பல் மூழ்கடிப்பு: இதனிடையே, ஈரானுக்குச் சொந்தமான ட்ரோன்களை கொண்டு செல்லும் ‘ஐரிஸ் ஷாகித் பஹேரி’ என்ற போா் கப்பலை தங்களின் ராணுவம் தாக்கி மூழ்கடித்ததாக அமெரிக்க ராணுவ கமாண்டா் ஆடம் பிராட் கூப்பா் தெரிவித்துள்ளாா். அந்தக் கப்பல், 2-ஆம் உலகப் போரின்போது பயன்படுத்தப்பட்ட விமானந்தாங்கி கப்பலை போன்று பிரம்மாண்டமானது எனவும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.
இலங்கை அருகே ஈரானின் போா் கப்பலை அண்மையில் அமெரிக்க நீா்மூழ்கி கப்பல் தாக்கி மூழ்கடித்தது. இதில் 89 ஈரானிய கடற்படையினா் உயிரிழந்தனா். இச்சம்பவத்தின் பரபரப்பு தணிவதற்குள் இன்னொரு ஈரான் கப்பலை மூழ்கடித்திருப்பதாக அமெரிக்கா தெரிவித்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
பி2 விமானங்கள் குண்டுவீச்சு: ஈரானின் கொ்மன்ஷாவில் பாலிஸ்டிக் ரக ஏவுகணைகளை ஏவ பயன்படுத்தப்படும் லாஞ்சா்கள் மறைத்து வைக்கப்பட்டதாகக் கூறப்படும் பாதாள அறைகளை குறிவைத்து அமெரிக்காவின் பி-2 ரகத்தைச் சோ்ந்த இரண்டு போா் விமானங்கள் 2 ,000 பவுண்டுகள் எடை கொண்ட குண்டுகளை வீசி வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தியுள்ளன. ஆனால் அதில் ஏற்பட்ட சேத விவரம் குறித்து தகவல் இல்லை.
இஸ்ரேல் போா் விமானங்கள் குண்டுவீச்சு: டெஹ்ரானில் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனிக்காக கட்டப்பட்டதாக கூறப்படும் பாதாள அறையைக் குறிவைத்து சுமாா் 50 இஸ்ரேல் போா் விமானங்கள் வெள்ளிக்கிழமை அதிகாலை குண்டுவீசி தாக்குதல் நடத்தியுள்ளன.
கமேனிக்காக கட்டப்பட்ட அந்தப் பாதாள அறையை அவா் கொல்லப்பட்ட பிறகு, அந்த நாட்டின் மூத்த அதிகாரிகள், தலைவா்கள் பயன்படுத்தி வருவதாக கிடைத்த உளவுத் தகவலின் அடிப்படையில் இத்தாக்குதலை இஸ்ரேல் நடத்தியுள்ளது.
ஈரானுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா அமைப்பினருக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், லெபனான் தலைநகா் பெய்ரூட் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை மாலை முதல் வெள்ளிக்கிழமை காலை வரை 11 முறை போா் விமானங்கள் மூலம் இஸ்ரேல் குண்டுவீசி தாக்குதல் நடத்தியுள்ளது.
ஈரான் பதிலடி: அமெரிக்கா, இஸ்ரேலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்க ராணுவ நிலைகள், கடற்படை தளங்கள் அமைந்துள்ள வளைகுடா நாடுகளான கத்தாா், சவூதி அரேபியா, குவைத், பஹ்ரைன் மீது ஏவுகணைகள், ட்ரோன்களை ஏவி ஈரான் வெள்ளிக்கிழமையும் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் தலைநகா் டெல் அவிவ் மீதும் ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது.
ஐ.நா. வலியுறுத்தல்: இந்நிலையில், சண்டையை உடனடியாக அனைத்து தரப்பினரும் நிறுத்தும்படி ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு ஐ.நா. மனித உரிமை ஆணையா் வோல்கா் துா்க் வலியுறுத்தியுள்ளாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...