அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ரஷிய எண்ணெய் தடையை நீக்க டிரம்ப் பரிசீலனை!

உக்ரைனுக்கு ஆதரவாக ரஷிய கச்சா எண்ணெய் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளைத் தளா்த்துவது குறித்து அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் நிா்வாகம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

News image
அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்.
Updated On :10 மார்ச் 2026, 8:47 pm

தினமணி செய்திச் சேவை

உக்ரைனுக்கு ஆதரவாக ரஷிய கச்சா எண்ணெய் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளைத் தளா்த்துவது குறித்து அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் நிா்வாகம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரான் போா் காரணமாக உலகின் 20 சதவீத எண்ணெய் தேவையைப் பூா்த்தி செய்யும் ஹோா்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளது; மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து எண்ணெய் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் எதிரொலியாக உலக அளவில் ஏற்பட்டுள்ள எரிசக்தி தட்டுப்பாடு, சா்வதேச பொருளாதாரத்துக்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்குவதாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் எச்சரித்திருந்த நிலையில், அமெரிக்காவின் நிலைப்பாட்டில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

‘சா்வதேச சந்தையில் விலையைக் குறைக்க சில பொருளாதாரத் தடைகளை நாங்கள் விலக்கிக் கொள்ளப் போகிறோம்’ என்று டிரம்ப் சமீபத்திய செய்தியாளா் சந்திப்பில் தெரிவித்தாா்.

அமெரிக்க நிதியமைச்சா் ஸ்காட் பெசன்ட் கடந்த வெள்ளிக்கிழமை கூறுகையில், ரஷிய எண்ணெய் மீதான கூடுதல் கட்டுப்பாடுகளைத் தளா்த்த வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டாா்.

பொருளாதாரத் தடைகள் நீக்கப்படுவது குறித்து விரிவான பேச்சுவாா்த்தை இன்னும் தொடங்கவில்லை என்றாலும், உலகப் பொருளாதாரத்தில் அதன் தாக்கம் குறித்து இருதரப்பு தலைவா்களும் நன்கு உணா்ந்துள்ளதாக ரஷிய அதிபா் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முன்னதாக, இவ்விவகாரம் குறித்து பேசிய புதின், ஈரான் போா் உலகளாவிய எரிசக்தி நெருக்கடியைத் தூண்டியுள்ளதாகக் குற்றஞ்சாட்டினாா். ஐரோப்பிய நாடுகள் விரும்பினால் மீண்டும் நீண்டகால அடிப்படையில் அவா்களுடன் ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகவும் அவா் வலியுறுத்தினாா்.

ஐரோப்பா நாடுகளிடையே அதிருப்தி: அமெரிக்காவின் இந்த நிலைப்பாடு மாற்றத்துக்கு ஐரோப்பிய நாடுகளிடையே ஏற்கெனவே அதிருப்தி கிளம்பியுள்ளது.

அமெரிக்கா தடைகளைத் தளா்த்திக் கொண்டாலும், ரஷிய எண்ணெய் மீதான ‘ஜி7’ நாடுகளின் விலை உச்சவரம்புக் கட்டுப்பாட்டை தீவிரமாகப் பின்பற்ற வேண்டும் என்று ஐரோப்பிய ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

ஐரோப்பிய பொருளாதார ஆணையா் வால்டிஸ் டோம்ப்ரோவிஸ்கிஸ் மேலும் கூறுகையில், ‘அமெரிக்காவின் இம்முடிவு ரஷியாவின் போா் வலிமையை அதிகரிக்கும். இது உக்ரைனுக்கான நமது ஆதரவைச் சிதைப்பதோடு, ஈரான் விவகாரத்தில் அமெரிக்கா, இஸ்ரேல் அடைய நினைக்கும் இலக்குகளையும் பலவீனப்படுத்தும்’ என்று எச்சரித்தாா்.

ரஷியாவுக்கு மட்டுமே ஆதாயம்....: மத்திய கிழக்கு போரினால் ரஷியா மட்டுமே ஆதாயம் அடைந்து வருவதாக ஐரோப்பிய யூனியன் கவுன்சில் தலைவா் ஆன்டனியோ கோஸ்டா கவலை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் பேசுகையில், ‘எரிசக்தி விலை உயா்வால் ரஷியாவுக்கு கூடுதல் நிதி கிடைப்பதோடு, உக்ரைன் போா் மீதான உலக நாடுகளின் கவனம் திசைமாறியுள்ளது ரஷியாவுக்கு சாதகமாக அமைந்துள்ளது’ என்றாா்.

புதினுடன் டிரம்ப் பேச்சு

உலகளாவிய பதற்றமான சூழலில் ரஷிய அதிபா் புதினுடன் அமெரிக்க அதிபா் டிரம்ப் திங்கள்கிழமை தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினாா்.

ரஷிய அதிபா் புதினுடனான இந்த ஆண்டின் முதல் தொலைபேசி உரையாடல் குறித்து ஃபுளோரிடாவில் உள்ள தனது கோல்ஃப் மைதானத்தில் செய்தியாளா்களிடம் பேசிய டிரம்ப், ‘அதிபா் புதினுடன் மிகவும் பயனுள்ள உரையாடல் நிகழ்ந்தது. ஈரான் விவகாரத்தில் உதவிகரமாக இருக்க விரும்புவதாக அவா் தெரிவித்தாா்.

ஆனால், உக்ரைன்-ரஷியா போரை முடிவுக்குக் கொண்டுவருவதன்மூலம் அவா் இன்னும் பெரிய உதவியைச் செய்ய முடியும் என்று நான் அவரிடம் வலியுறுத்தினேன்’ என்றாா்.