இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அரசு விதித்துள்ள தடையையும் மீறி தலைநகா் இஸ்லாமாபாத்தில் போராட்டம் நடத்தும் இம்ரான் கான் ஆதரவாளர்களைக் கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பாகிஸ்தானில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் பிரபல கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான் மீது அடுக்கடுக்காக பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையில், அவர் கடந்த ஓராண்டுக்கும் மேலாக சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், அவர் மீதான ஒரு வழக்கில் அண்மையில் நீதிமன்றத்தால் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இதனையடுத்து, இம்ரான் கானை சிறையிலிருந்து விடுவிக்க வேண்டுமென்பதை முக்கிய கோரிக்கையாக முன்வைத்து, இம்ரான் கானின் பிடிஐ கட்சியினர் தங்கள் கட்சித் தலைவருக்கு ஆதரவாக திடீரென பெருந்திரளாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பாகிஸ்தானில் அசாதாரண சூழல் நிலவுகிறது.
இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பீபி தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பேரணியைத் தொடங்கிய லட்சக்கணக்கான போராட்டக்காரர்கள், இஸ்லாமாபாத் நகரை திங்கள்கிழமை மாலை சென்றடைந்தனர்.
இதனிடையே, பாகிஸ்தான் அரசு விதித்துள்ள தடையையும் மீறி தலைநகர் இஸ்லாமாபாத் நகரை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டுள்ளதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. போராட்டக்காரர்களை கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி கலைந்து போகச் செய்ய பாதுகாப்புப் படையினரும் காவல்துறையினரும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இருப்பினும், தொடர்ந்து முன்னேறி வரும் போராட்டக்காரர்களை ஒடுக்க ராணுவம் களமிறங்கியுள்ளது.
போராட்டக்கார்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையேயான மோதலில் திங்கள்கிழமை(நவ. 25) பாதுகாப்புப் படையினர் 4 பேர் மரணமடைந்தனர். போராட்டாக்காரர்கள் தரப்பில் ஒரு நபரும் உயிரிழந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்குள்ள பல சாலைகளில் கண்டெய்னர்கள் குவிக்கப்பட்டு போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இஸ்லாமாபாத்தில் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன.
இப்போதைய சூழலில், பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டு, பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தும் போராட்டக்காரர்கள், கலைந்து செல்ல மறுத்தால் அவர்களைக் கண்டதும் சுட ராணுவத்தினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.