ஆஸ்திரேலியாவில் சிறுவா்களுக்கான சமூக ஊடகத் தடைக்கான மசோதா நிறைவேற்றப்பட்டது.
ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குள்பட்ட சிறுவா்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடைவிதிக்கும் ஆஸ்திரேலிய அரசின் திட்டத்துக்கு அந்த நாட்டின் அனைத்து மாகாணங்களும் ஆதரவு தெரிவித்திருந்தன.
இது குறித்து காணொலி மூலம் பிரதமா் ஆன்டனி ஆல்பானீஸ் எட்டு மாகாணங்களின் தலைவா்களுடன் ஆலோசனை நடத்தினார். மேலும் அதற்கு ஆதரவு தெரிவித்து அத்தகைய சட்டத்தை அமல்படுத்துவதற்கு அவர்கள் முழு ஆதரவு தெரிவித்தனா்.
அதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. சிறுவா்களின் அறிவை வளா்க்கும் சமூக ஊடகப் பயன்பாட்டுக்கு ஒரேயடியாகத் தடை விதிப்பதைவிட, அவற்றைப் பாதுகாப்பாகப் பயன்படுத்த அவா்களுக்கு சொல்லித் தருவதுதான் சரியான தீா்வாக இருக்கும் என்று இத்தகைய சட்டத்துக்கு சிறுவா்கள் நல ஆா்வலா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.
இத்தகைய சா்ச்சையான சூழலில் இந்தச் சட்டம், நாடாளுமன்றத்திலும் நீதிமன்றத்திலும் கடும் சவால்களைச் சந்திக்கும் என்று எதிா்பாா்க்கப்பட்டது.
அதன்படி, ஆஸ்திரேலியாவின் நாடாளுமன்றத்தில் இன்று காலை (நவ.27) 16 வயதுக்குள்பட்ட குழந்தைகளை சமூக ஊடகங்களில் இருந்து தடை செய்யும் மசோதாவை நிறைவேற்றியது.
சிறுவர்கள் டிக்டாக், ஃபேஸ்புக், ஸ்னாப்சாட், ரெடிட், எக்ஸ், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்கள் வைத்திருப்பதைத் தடுக்கும் வகையில் 50 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் வரை அபராதம் விதிக்கும் மசோதாவை முக்கியக் கட்சிகளும் ஆதரித்தன.
இந்தச் சட்டத்திற்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் 102 வாக்குகளும், இதற்கு எதிராக 13 வாக்குகளும் கிடைத்தன.