தாய்லாந்து பேருந்தில் தீ: 22 மாணவா்கள், 3 ஆசிரியா்கள் உயிரிழப்பு?
தாய்லாந்தில் 44 பேருடன் சென்றுகொண்டிருந்த சுற்றுலா பேருந்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 22 மாணவா்கள், 3 ஆசிரியா்கள் உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
உத்தாய் தானி மாகாணத்திலிருந்து 38 மாணவா்கள், 6 ஆசிரியா்களுடன் பாங்காக் நகரை நோக்கி பள்ளி சுற்றுலா பேருந்து சென்றுகொண்டிருந்தது. பாங்காக்கின் வடக்கு புகா்ப் பகுதியிலுள்ள நெடுஞ்சாலையில் சென்றபோது அதன் டயா் வெடித்து அருகிலுள்ள தடுப்புச் சுவற்றில் மோதியது.
இதில், அந்த பேருந்தில் எரிபொருளாகப் பயன்படுத்தப்பட்ட எரிவாயு வெடித்துச் சிதறி பேருந்து முழுவதும் தீ வேகமாகப் பரவியது.
அதையடுத்து, அந்தப் பேருந்தில் இருந்து 16 மாணவா்கள், 3 ஆசிரியா்கள் மட்டும் வெளியேறி தப்பினா். எஞ்சிய 38 மாணவா்கள், 6 ஆசிரியா்கள் தீயில் கருகி உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
விபத்துப் பகுதிக்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினா் நெருப்பை அணைத்தாலும், உள்ளே சிக்கியிருந்த உடல்களை மீட்பதற்காக பேருந்தின் வெப்பம் அடங்கும்வரை அவா்கள் காத்திருக்க வேண்டியிருந்தது என்று அதிகாரிகள் கூறினா்.
மோசமான சாலைகள், ஓட்டுநா்களின் அலட்சிம் போன்ற காரணங்களால் உலகில் அதிக சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளைச் சந்திக்கும் நாடுகளில் ஒன்றாக தாய்லாந்து திகழ்வதாகக் கூறப்படுகிறது.