
இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதலைத் தொடங்கியுள்ள நிலையில், ஜோர்டான் தனது வான்வழித் தடத்தை தற்காலிகமாக மூடியுள்ளது.
இதன்மூலம் ஜோர்டான் எல்லையில் விமானங்கள் பறப்பதற்கு தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜோர்டான் மற்றும் நாட்டு மக்களை பாதுகாக்கும் நோக்கத்தில் வான்வழித் தடங்களில் இந்தக் கட்டுப்பாட்டை விதிப்பதாகவும் அந்நாட்டு செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
மத்திய கிழக்கில் உள்ள இஸ்ரேல் மீது ஈரான் நேற்று இரவு ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது. மேலும், லெபனானில் தரைவழித் தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
காஸாவின் ஹமாஸ் அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போரில், ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக லெபனானில் செயல்பட்டுவரும் ஹிஸ்புல்லா ஆயுதக் குழுக்கள் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் சமீபத்தில் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். மற்றொரு நாளில் அந்த அமைப்பின் மத்திய கவுன்சில் துணைத் தலைவர் நபீல் கெளக்கும் கொல்லப்பட்டார்.
கடந்த மாதம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காஸாவில் உள்ள ஹமாஸ் அமைப்பின் முக்கியத் தலைவரான இஸ்மாயில் ஹனீயே கொல்லப்பட்டார்.
இவ்வாறு ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புகளின் முக்கியத் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தியதால், அதற்கு பழிவாங்கும் வகையில் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.
படிக்க | போர்ப் பதற்றம்: ஜி7 நாடுகளின் தலைவர்களுடன் இத்தாலி ஆலோசனை!
இதனால் அண்டை நாடான ஜோர்டான் தனது வான் எல்லையை மூடுவதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பேசிய ஜோர்டான் அரசின் செய்தித் தொடர்பாளர் முகம்மது மோமானி,
''ஜோர்டான் தனது வான் வழித் தடத்தை தற்காலிகமாக மூடுகிறது. தங்கள் வான் எல்லைக்குள் நுழைந்த பல்வேறு ஏவுகணை மற்றும் ட்ரோன்களுக்கு ஜோர்டான் விமானப் படை பதிலடி கொடுத்து அழித்துள்ளது. ஜோர்டானை போர்க்களமாக மாற்ற விரும்பவில்லை. நாட்டு மக்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம். எல்லைப் பரப்பையும், நாட்டு மக்களையும் பாதுகாக்கும் வகையில் வான் எல்லைகளை தற்காலிகமாக மூட ஜோர்டான் முடிவு செய்துள்ளது'' எனக் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.