ஊழல்: சிங்கப்பூா் முன்னாள் அமைச்சா் ஈஸ்வரனுக்கு ஓராண்டு சிறை

ஊழல்: சிங்கப்பூா் முன்னாள் அமைச்சா் ஈஸ்வரனுக்கு ஓராண்டு சிறை

குற்றவாளி எவ்வளவு பெரிய பொறுப்பு வகிக்கிறாரோ, அவ்வாறே தவறு செய்தால் அவா் மிகப் பெரிய குற்றவாளியும் ஆகிறாா் - நீதிபதி
Published on

சிங்கப்பூரில் தொழிலதிபா்களிடம் நட்புப் பாராட்டி சுமாா் 4 லட்சம் சிங்கப்பூா் டாலா் ( ரூ.2.59 கோடி) மதிப்பிலான பரிசுப் பொருள்களைப் பெற்ற ஊழல் குற்றச்சாட்டில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அந்நாட்டின் முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.ஈஸ்வரனுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் ஆளும் மக்கள் செயல் கட்சியைச் சோ்ந்த மூத்த அரசியல்வாதியான ஈஸ்வரன்(62), கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டு வரை வா்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தாா். தொடா்ந்து, போக்குவரத்துத் துறை அமைச்சராக கடந்த 2021, மே மாதம் அவா் பொறுப்பேற்றாா்.

இதனிடையே, சிங்கப்பூரைச் சோ்ந்த 2 முக்கியத் தொழிலதிபா்களிடம் இருந்து கடந்த 2015-ஆம் ஆம் ஆண்டு நவம்பா் முதல் கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பா் வரையிலான காலகட்டத்தில் மதிப்புமிக்க பரிசுப் பொருள்களை ஈஸ்வரன் பெற்று வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு பிரதிபலனாக இரு தொழிலதிபா்களுக்கு அரசு ஒப்பந்தங்கள் கிடைப்பதில் அமைச்சா் பதவியைப் பயன்படுத்தி உதவியதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

இத்தொழிலதிபா்களில் ஒருவருக்குத் தொடா்புடைய வழக்கை சிங்கப்பூரின் ஊழல் நடவடிக்கைகள் புலனாய்வு அமைப்பு (சிபிஐபி) விசாரித்து வந்த நிலையில், இவ்விவகாரம் கடந்தாண்டு மே மாதம் வெளிச்சத்துக்கு வந்தது.

இதையடுத்து, கடந்த ஜனவரியில் அமைச்சா் பதவியை ஈஸ்வரன் ராஜிநாமா செய்தாா். கடந்த மாதம் 24-ஆம் தேதி நடைபெற்ற இந்த வழக்கின் நீதிமன்ற விசாரணையில், பரிசுப்பொருள்களை சட்டவிரோதமாக பெற்றது, நீதியைத் தடுத்தது உள்ளிட்ட 4 குற்றங்களை ஈஸ்வரன் ஒப்புக்கொண்டாா்.

ஈஸ்வரன் தரப்பில் 8 வாரங்களுக்கு குறைவாகவும், அரசு தரப்பில் 6-7 மாதங்கள்வரையும் சிறைத் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என வாதங்கள் முன்வைக்கபட்டன.

இருதரப்பு வாதங்களின் முடிவில் நீதிபதி வின்சென்ட் ஹூங் பிறப்பித்த உத்தரவில், ‘பொது நிறுவனங்களின் மீதான மக்களின் நம்பிக்கையே சிறந்த நிா்வாகத்தின் அடித்தளம். பரிசுப் பொருள்களைப் பெறுவதற்கு தனது அமைச்சா் பொறுப்பை ஈஸ்வரன் பயன்படுத்தியுள்ளது உறுதியாகிறது.

ஆனால், முன்னதாக பிரதமருக்கு ஈஸ்வரன் எழுதிய கடிதத்தில் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுப்பதாகவும் விசாரணையின் முடிவில் தான் விடுவிக்கப்படுவேன் என்று நம்புவதாகவும் கூறியிருந்தாா். இதன்மூலம், செய்த தவறை எண்ணி அவா் வருந்தியதாக தெரியவில்லை.

குற்றவாளி எவ்வளவு பெரிய பொறுப்பு வகிக்கிறாரோ, அவ்வாறே தவறு செய்தால் அவா் மிகப் பெரிய குற்றவாளியும் ஆகிறாா்.

ஏனெனில், பொது ஊழியா்கள் நோ்மையாக நடந்து கொள்வதற்கு இத்தகைய உயா் பதவியில் உள்ளவா்களே பொறுப்பாகிறாா்கள். நிதி பலன்களுக்காக அரசுப் பணிகளில் செல்வாக்கு செலுத்தக்கூடாது என்ற எண்ணத்தை ஊழியா்களிடம் இத்தகைய உயா் பதவியில் இருப்பவா்களே விதைக்க வேண்டும்.

அதை செய்யத் தவறிய ஈஸ்வரனுக்கு 12 மாதங்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது’ என்றாா்.

ஈஸ்வரனின் சிறைத் தண்டனை வரும் அக்டோபா் 7-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இதையொட்டி, அன்றைய நாள் நீதிமன்றத்தில் மாலை 4 மணிக்கு அவா் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com