
இந்தியாவும் பாகிஸ்தானும் வருங்காலங்களில் ஒன்றாக பணியாற்ற விரும்புவதாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இந்த நிலையில், அமைச்சர் ஜெய்சங்கரின் வருகையை மேற்கோள் காட்டிய பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், பிரதமர் மோடி வருகை புரிந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று கூறினார்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் முதல்வர் அலுவலகத்தில் செய்தியாளர்களுடன் பேசிய நவாஸ் ஷெரீப், ``ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டுக்காக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் இஸ்லாமாபாத் வருகை ஒரு நல்ல தொடக்கம்; இரு நாடுகளும் இங்கிருந்தே முன்னேற வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தானுக்கு வந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
எங்கள் அண்டை நாடுகளை எங்களால் மாற்ற முடியாது. இந்தியாவாலும் அதன் அண்டை நாடுகளை மாற்ற முடியாது. நாம் இருவரும் நல்ல அண்டை நாடுகளைப்போல வாழ வேண்டும். நாம் கடந்த காலத்திற்குள் செல்லக்கூடாது; வருகிற எதிர்காலத்தைத்தான் பார்க்க வேண்டும். இரு தரப்பினருக்கும் அவர்களின் குறைகள் உள்ளன.
நாம் கடந்த காலத்தை புதைக்க வேண்டும், எதிர்காலத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டும். வர்த்தகம், முதலீடுகள், தொழில், சுற்றுலா, மின்சாரம் முதலானவற்றை இருதரப்பு ஒத்துழைப்புக்கான சாத்தியமான துறைகளாக பட்டியலிட்டு, இந்தியாவின் சொந்த மாநிலங்கள் ஒருவருக்கொருவர் கையாள்வதுபோல், இந்தியாவும் பாகிஸ்தானும் அண்டை நாடுகளும் கையாள வேண்டும் என்று நான் நம்புகிறேன். நாம் ஒன்றாக சேர்ந்து இவையனைத்தையும் தீவிரமாக விவாதிக்க வேண்டும்.
இதையும் படிக்க: ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரின் கடைசி நிமிடங்கள்.. வெளியான விடியோ
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், இந்தியாவுடனான உறவை சீர்குலைக்கும் வகையில், 2018 ஆம் ஆண்டில் பிரதமர் மோடியின் மீது சில வார்த்தைகளைப் பயன்படுத்தினார். இரண்டு நாடுகளின் தலைவர்களாகவோ, அண்டை நாடுகளின் தலைவர்களாகவோ, இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது.
நவம்பர் மாதம் நடைபெறவுள்ள காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் மாநாட்டில் இரு நாட்டின் பிரதமர்களும் சந்திக்க வேண்டும். கடந்த 75 ஆண்டுகளில் நாம் நிறையவற்றை இழந்துள்ளோம்.
அதேபோல், இரு நாடுகளின் கிரிக்கெட் அணிகளும் இறுதிப் போட்டியில் விளையாடுவதையும் நான் பார்க்க விரும்புகிறேன்; இந்தியாவுக்கு சென்றே பார்க்க விரும்புகிறேன்’’ என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.