
பிரேஸிலில் எக்ஸ் ஊடகம் முடக்கப்பட்டதையடுத்து, பிரேஸில் நீதிபதியின் குற்றங்களை விளக்கப் போவதாக எக்ஸ் உரிமையாளர் கூறியுள்ளார்.
பிரேஸிலில் எக்ஸ் சமூக ஊடக தளம் முடக்கப்பட்டுள்ளது. தங்களது நிறுவனத்துக்கான சட்டபூா்வ பிரதிநிதியை எக்ஸ் தளம் நியமிக்கத் தவறியதைத் தொடா்ந்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தொடா்ந்து இதற்கான நடவடிக்கைகள் சனிக்கிழமை தொடங்கப்பட்டன.
பிரேஸிலில் முன்னாள் அதிபா் ஜெயிர் பொல்சொனாரோவின் லிபரல் கட்சி உள்ளிட்ட தீவிர வலதுசாரி அமைப்பினரின் பதிவுகளை நீக்கவும், அவா்களது கணக்குகளை முடக்கவும் லூலா டாசில்வா தலைமையிலான தற்போதைய அரசு எக்ஸ் தளத்துக்கு அவ்வப்போது உத்தரவிட்டுவருகிறது.
இந்த விவகாரத்தில் எக்ஸ் தளத்துக்கும் பிரேஸில் உச்சநீதிமன்ற நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டே மொராயெஸுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் நாளுக்கு நாள் முற்றிவந்தது.
இது தொடா்பான வழக்கில் எக்ஸ் தளத்தின் சார்பாக, ஆஜராக பிரேஸிலுக்கான பிரதிநிதியை எக்ஸ் தளம் அறிவிக்காததால், அந்தத் தளத்தை முடக்க நீதிபதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார். உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தொடா்ந்து இதற்கான நடவடிக்கைகள் சனிக்கிழமை தொடங்கப்பட்டன.
இந்த நிலையில், பிரேஸில் உச்சநீதிமன்ற நீதிபதி அலெக்ஸாண்ட்ரேவின் குற்றச் செயல்களை, இனிவரும் நாள்கள்தோறும் உலகுக்கு சொல்லப்போவதாக எக்ஸ் தளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் கூறியுள்ளார்.
எலான் மஸ்க், தனது எக்ஸ் பக்கத்தில் ``பிரேசிலிய போலி நீதிபதி அலெக்ஸாண்ட்ரே செய்த குற்றங்கள் குறித்த தினசரி தரவு குப்பையை, இன்று முதல் நாங்கள் தொடங்குகிறோம். அவரால் பிரேஸிலில் மட்டுமே இந்த தளத்தைத் தடுக்க முடியும்.
ஆனால் அவரது சட்டவிரோத, வெட்கக்கேடான மற்றும் பாசாங்குத்தனமான செயல்களை முழு உலகமும் அறிந்து கொள்வதைத் தடுக்க முடியாது’’ என்று பதிவிட்டுள்ளார்.