வடகொரியாவில் அரசு அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை அளிக்கப்பட்டதாகக் கூறப்படும் வதந்திகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார், வடகொரிய அதிபர் கிம் ஜாக் உன்.
வட கொரியாவில், கடந்த ஜூலை மாதத்தில் பெய்த கனமழையின் விளைவாக வெள்ளம் ஏற்பட்டதுடன் நிலச்சரிவும் ஏற்படக் காரணமாயிருந்தது. இந்த பேரழிவுகளின் விளைவாக, 4000-க்கும் மேற்பட்ட வீடுகள் பாதித்தது மட்டுமின்றி, சுமார் 15000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
மேலும், சுமார் 1000 பேர் இறந்ததாகவும் கூறப்படுகிறது. இதன்காரணமாக, அரசு அதிகாரிகள் மீது ஊழல் , கடமையில் அலட்சியம் ஆகிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இந்த நிலையில், வெள்ளத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு பொறுப்பானவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கூறியதுடன், கடந்த மாத இறுதியில் 20 முதல் 30 பேர் வரையில் தூக்கிலிடப்பட்டனர் என்றும் சில தகவல்கள் வெளிவருகின்றன.
இதனைத் தொடர்ந்து, வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ``வெள்ளத்தால் மூழ்கிய பகுதிகளை மீண்டும் கட்டியெழுப்பவும், மீட்டெடுக்கவும் பல மாதங்கள் ஆகும்.
பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் உள்பட 15,400 பேருக்கு நிவாரண முகாம்களில் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், வட கொரியாவின் நற்பெயரை சேதப்படுத்த, வேண்டுமென்றே தூக்கு தண்டனை போன்ற அவதூறான வதந்திகளை தென் கொரியா பரப்புகிறது’’ என்று கூறியுள்ளார்.