டொனால்ட் டிரம்பைவிட கமலா ஹாரிஸுக்கு அதிகளவில் யூதர்கள் ஆதரவளிப்பதாக கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான துணையதிபர் கமலா ஹாரிஸை எதிர்த்து, குடியரசுக் கட்சி வேட்பாளரான முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். இந்த நிலையில், வாஷிங்டனில் டொனால்ட் டிரம்ப் தலைமையில் வியாழக்கிழமையில், குடியரசு கட்சியின் தேர்தல் பிரசாரம் நடத்தப்பட்டது.
பிரசாரத்தில் யூதர்களிடையே டிரம்ப் பேசியதாவது, ``தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் இஸ்ரேல் இருக்காது; அவ்வாறு நடந்தால், இங்குள்ள யூத மக்கள்தான் காரணமாக இருப்பர்.
இதன்மூலம், ஜனநாயகக் கட்சிக்கு வாக்களிக்க முயலும் யூதர்கள் மீதே குற்றம் சாட்டப்படும்.
என் கருத்துப்படி, அது நடந்தால் இரண்டு ஆண்டுகளுக்குள் இஸ்ரேல் இருக்காது; அது அழிக்கப்படும். அதுதான் நடக்கப் போகிறது. இதைச் சொல்வது கடினமான விஷயம்தான். இஸ்ரேலை நாம் காப்பாற்ற வேண்டும்.
இனி இது விளையாட்டு அல்ல. நான் வெற்றி பெறாவிட்டால் பூமியின் முகத்திலிருந்தே இஸ்ரேல் துடைத்தெறியப்படும். ஆனால், நான் வெற்றி பெற்றால், இஸ்ரேல் பாதுகாப்பாக இருக்கும்.
மேலும், யூதத்தின் மீதான விரோதத்தின் நச்சு, அமெரிக்கா மற்றும் உலகம் முழுவதும் பரவுவதைத் தடுப்போம்’’ என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்த கருத்துக் கணிப்பில், யூதர்களில் 60 சதவிகிதத்துக்கும் அதிகமானோர், கமலா ஹாரிஸுக்குதான் வாக்களிக்க வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்பட்டது.
2016 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில், அமெரிக்க யூதர்களிடையே 30 சதவிகிதத்திற்கும் குறைவான வாக்குகளையே டிரம்ப் பெற்றிருந்தார். 2020 ஆம் ஆண்டு தேர்தலிலும் அவ்வாறே, ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி ஜோ பைடனிடம் தோல்வியடைந்து விட்டதாகக் கூறியிருந்தார்.