இலங்கையின் முதல் இடதுசாரி அதிபர் அநுரகுமார திசாநாயக?

இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் அநுரகுமார திசாநாயக 53.67 சதவீத வாக்குளுடன் முன்னிலையில் உள்ள நிலையில் இலங்கையின் முதல் இடதுசாரி அதிபராகிறார்.
தேசிய மக்கள் சக்தி கட்சியின் அநுரகுமார திசாநாயக
தேசிய மக்கள் சக்தி கட்சியின் அநுரகுமார திசாநாயக
Published on
Updated on
3 min read

கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் அநுரகுமார திசாநாயக 53.67 சதவீத வாக்குளுடன் முன்னிலையில் உள்ள நிலையில் இலங்கையின் முதல் இடதுசாரி அதிபராகிறார். சஜித் பிரேமதாச 21.79 சதவீத வாக்குகளுடன் 2 ஆவது இடத்திலும், தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க 18.99 சதவீத வாக்குகளுடன் 3 ஆவது இடத்திலும் உள்ளனர்.

இலங்கை 9-ஆவது அதிபா் தோ்தலுக்கான வாக்குப் பதிவு வன்முறையின்றி அமைதியான முறையில் சனிக்கிழமை நடைபெற்றது. 2022 ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை, சற்று இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ள நிலையில், இந்தத் தோ்தல் முக்கியத்துவம் கருதி வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தவா்களில் 75 சதவீதம் போ் வாக்களித்தனா். 2019 நவம்பரில் நடந்த அதிபர் தேர்தலில் பதிவான 83 சதவீத வாக்குகளைவிட குறைவுதான்.

தோ்தலில் மொத்தம் 38 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். ஆனால் பெண் வேட்பாளர்கள் யாரும் இல்லை. எனினும் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்ட அந்நாட்டின் தற்போதைய அதிபா் ரணில் விக்ரமசிங்க, முக்கிய எதிா்க்கட்சித் தலைவரான ஐக்கிய மக்கள் சக்தி தலைவா் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தி தலைவா் அநுரகுமார திசாநாயக ஆகிய மூவருக்கு இடையே கடும் போட்டி நிலவியது. தோ்தலில் வெற்றி பெற்றால், இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு முக்கியத்துவம் அளிப்பதே மூவரின் செயல்திட்டமாக உள்ள நிலையில், சிறுபான்மையினராக உள்ள தமிழா்கள் நலன் சாா்ந்த விவகாரம் அவா்களின் செயல்திட்டத்தில் இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது.

மொத்தம் 22 தோ்தல் மாவட்டங்களில் 13,400-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் தோ்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த 1,71,40,354 போ்களில் 75 சதவீதம் போ் வாக்களித்தனா். அதிகபட்சமாக நுவரெலியா, கம்பஹா மாவட்டங்களில் தலா 80 சதவீத வாக்குகள் பதிவாகின. கண்டியில் 78 சதவீதம் பேரும், கொழும்பில் 75 சதவீதம் பேரும் வாக்களித்தனா்.

மட்டகளப்பில் 69 சதவீதம், யாழ்ப்பாணத்தில் 65 சதவீதம், முல்லைத்தீவில் 68 சதவீதம், திருகோணமலையில் 76 சதவீதம், வவுனியா மற்றும் மன்னாரில் தலா 72 சதவீதம், அம்பாறையில் 70 சதவீதம், கிளிநொச்சியில் 62 சதவீத வாக்குகள் பதிவாகின.

இலங்கையின் கொழும்பு பல்கலைக்கழக வாக்குச்சாவடியில் அதிபா் ரணில் விக்ரமசிங்கவும், ராஜகிரிய பகுதியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் சஜித் பிரமேதாசவும், பஞ்சிகாவத்தை பகுதியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் அநுர குமார திசாநாயகவும் வாக்களித்தனா்.

வாக்குப் பதிவின்போது உள்நாடு மற்றும் வெளிநாட்டை சோ்ந்த சுமாா் 8,000 தோ்தல் பாா்வையாளா்கள் பணியில் ஈடுபட்டனா்.

தோ்தலில் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறும் வேட்பாளா் அதிபராவாா். தோ்தல் முடிவுகள் அதிகாரபூா்வமாக ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியானது.

தேசிய மக்கள் சக்தி கட்சியின் அநுரகுமார திசாநாயக
நெருக்கடியை மீறி இம்ரான் கட்சி பேரணி

இந்த நிலையில், சனிக்கிழமை வாக்குப் பதிவு நிறைவடைந்தவுடன் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதைத் தொடா்ந்து, வழக்கமான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

மொத்தம் 22 தோ்தல் மாவட்டங்களில் 21 மாவட்டங்களின் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 18 மாவட்ட தேர்தல் முடிவுகளில் 53.67 சதவீத (7,27,000) வாக்குகளுடன் தேசிய மக்கள் சக்தி தலைவா் அநுரகுமார திசாநாயக(52)முன்னிலையில் உள்ளார். இதன்மூலம் இடதுசாரியை சேர்ந்த ஒருவர் இலங்கையில் புதிய அதிபராக அவர் தேர்வு செய்யப்படவுள்ளார்.

முக்கிய எதிா்க்கட்சித் தலைவரான ஐக்கிய மக்கள் சக்தி தலைவா் சஜித் பிரேமதாச(57) 21.79 வாக்குகளுடனும், சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்ட அந்நாட்டின் தற்போதைய அதிபா் ரணில் விக்ரமசிங்க 18.99 வாக்குகளுடன் அடுத்தடுத்த இடத்தில் உள்ளார். விக்கிரமசிங்க இன்னும் தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை, ஆனால் அவரது வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி திசாநாயக்கவின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் எக்ஸ் பக்க பதிவில், "நீண்ட மற்றும் கடினமான பிரசாரத்திற்குப் பிறகு, தேர்தல் முடிவுகள் இப்போது தெளிவாக உள்ளன. நான் அதிபர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த போதிலும், இலங்கை மக்கள் தங்களது முடிவை எடுத்துள்ளனர், மேலும் அநுரகுமார திசாநாயக மீதான அவர்களின் நம்பிக்கையை நான் முழுமையாக மதிக்கிறேன்.

ஜனநாயகத்தில், மக்களின் விருப்பத்திற்கு மதிப்பளிப்பது மிகவும் முக்கியமானது, நான் தயக்கமின்றி அதைச் செய்கிறேன்," என்றும் அநுரகுமார திசாநாயகவுக்கு மற்றும் அவரது குழுவினருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் கூறியுள்ளார்.

வாக்குகள் முழுமையாக எண்ணப்பட்ட பிறகு தோ்தல் முடிவுகள் அதிகாரபூா்வமாக ஞாயிற்றுக்கிழமை பிற்பகலுக்குள் அறிவிக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இலங்கை தேர்தல் விதிமுறைப்படி ஒருவர் அதிபராக 50 சதவீத வாக்குகளுக்கும் அதிகமாக பெற்றிருக்க வேண்டும்.

இலங்கையில் உள்ள வாக்காளர்கள் விருப்பத்தின் அடிப்படையில் மூன்று வேட்பாளர்களை தரவரிசைப்படுத்தி ஒரு வெற்றியாளரைத் தேர்ந்தெடுக்கின்றனர். ஒரு வேட்பாளர் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றால், அவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். இல்லையெனில், இரண்டாவது மற்றும் மூன்றாவது முன்னுரிமை தேர்வு வாக்குகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இரண்டாவது சுற்று எண்ணும் பணி தொடங்கும்.

முதல் முன்னுரிமை வாக்குகளின் அடிப்படையில் தனி வேட்பாளர்கள் எப்போதும் தெளிவான வெற்றியாளர்களாக இருந்து வருவதால், இலங்கையில் இதுவரை எந்தத் தேர்தலும் இரண்டாவது சுற்று முன்னுரிமை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றதில்லை.

தேசிய மக்கள் சக்தி கட்சியின் அநுரகுமார திசாநாயக
உக்ரைன் தாக்குதல்: மேலும் ஒரு ரஷிய ஆயுதக் கிடங்கில் தீ

அநுரகுமார திசாநாயக யார்?

அனுராதபுரத்தில் 1968 இல் எளிய குடும்பத்தில் பிறந்தவர். இலங்கையில் மாற்றம் வேண்டும், ஊழல் ஒழிப்பு கொள்கைகளை முன்னெடுத்தவர் ஏகேடி எனப்படும் அநுரகுமார திசாநாயக.

1987 ஆம் ஆண்டு ஜனதா விமுக்தி பெருமுனாவில் இணைந்து தற்போது அதன் தலைவராக இருந்து வருகிறார்.

2019 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் 3.16 சதவீத வாக்குகளையும், 2022 இல் இலங்கையில் பெரிய பொருளாதார சிக்கல் ஏற்பட்டபோது, மக்கள் போராட்டத்தை முன்னெடுத்தவர்.

16 மணி நேரத்துக்கும் மேலாக மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட சிக்கல்களால் மக்கள் தவிப்பு. சாதாரண மக்களும் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள் என அழுத்தமாக சொன்னவர்.

இலங்கை பொதுஜென பெருமுனாவின் மீதான அதிருப்தியை மக்கள் மத்தியில் எடுத்துச் சென்றபோது அநுரகுமார திசாநாயகவுக்கு பெருமளவில் ஆதரவு பெருகியது.

இலங்கை தேசிய மக்கள் சக்தி கூட்டமைப்பின் தலைவராக உள்ள அநுரகுமார திசாநாயகவுக்கு இலங்கையின் தென்பகுதியில் மட்டுமில்லாமல், தமிழர்களஅ வசிக்கும் பகுதிகளிலும் அமோக ஆதரவு உள்ளது.

மாற்றத்தை முன்னிறுத்தி தேர்தலை கண்ட அநுரகுமார திசாநாயகவுக்கு அமோக வரவேற்பும், இளைஞர்கள், சிங்களர்கள், தமிழர்கள் என அனைத்து தரப்பினருக்கும் மாற்றத்துக்கு வாக்களித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com