சீனாவில் பள்ளி நிர்வாகத்திடம் அனுமதி கோராமல், இரவில் கழிப்பறைக்கு சென்ற மாணவருக்கு தண்டனை வழங்கிய பள்ளி நிர்வாகத்திற்கு சீன கல்வித்துறை கண்டனம் தெரிவித்துள்ளது.
சீனாவின் ஷான்க்ஸி மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளி விடுதியில், இரவு 10.45 மணிக்குமேல் மாணவர்கள் வெளியில் செல்லக் கட்டுப்பாடுகள் இல்லை. வெளியில் செல்ல வேண்டுமென்றால், பள்ளி நிர்வாகத்திடம் அனுமதி கோரவேண்டும்.
இந்த நிலையில், விடுதியில் படித்து வந்த மாணவர் ஒருவர், பள்ளி நிர்வாகத்திடம் அனுமதி கோராமல் இரவு 11 மணியளவில், பள்ளிக்கு வெளியே இருந்த கழிப்பறைக்கு சென்றுள்ளார். இரவில் வெளியே சென்ற மாணவரைக் கண்ட விடுதி நிர்வாகம், அந்த மாணவரிடம் மன்னிப்புக் கடிதம் கேட்டது.
மேலும், மன்னிப்புக் கடிதத்தை 1000 பிரதிகள் எடுத்து பள்ளி மாணவர்களிடம் விநியோகிக்கவும் கூறியுள்ளது.
மன்னிப்புக் கடிதத்தில் மாணவர், ``நான் பள்ளி விதிகளை கடுமையாக மீறி விட்டேன். மாலையில் கழிப்பறைக்குச் செல்வது மற்ற மாணவர்களின் தூக்கத்தைத் தொந்தரவு செய்தது மட்டுமல்லாமல், எனது வகுப்பிற்கு அவமானத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதற்காக எனது ஆசிரியர்களிடமும் சக மாணவர்களிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எதிர்காலத்தில் இதுபோன்ற நடத்தையில் மீண்டும் ஈடுபட மாட்டேன் என்று உறுதியளிக்கிறேன்’’ என்று எழுதியதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பான தகவல்கள் சீன சமூக ஊடகங்களில் பரவிய நிலையில், பள்ளி நிர்வாகத்தின் தண்டனைக்கு பலரும் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்தனர். சமூக ஊடகத்தில் ஒருவர் ``இரவு 11 மணிக்குப் பிறகு கழிப்பறைக்குச் செல்வது ஏன் பள்ளியின் விதிகளை மீறுகிறது என்று எனக்கு புரியவில்லை. கழிப்பறை செல்ல வேண்டிய நேரத்தில் யாரால் கட்டுப்படுத்த முடியும்?’’ என்று கூறியிருந்தார்.
மேலும், மற்றொருவர் ``இந்த பள்ளி, கடுமையான விதிமுறைகளைக் கொண்ட சிறைச்சாலையை ஒத்திருக்கிறது’’ என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து, அந்த பள்ளியின் செயலுக்கு சீனாவின் கல்வி ஆணையம் எதிர்ப்பு தெரிவித்தது. இதுகுறித்து, கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது, ``இந்த சம்பவத்திலிருந்து கற்றுக் கொள்ளவும், அதன் தவறுகளைப் பற்றி சிந்திக்கவும் பள்ளிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகத்தின் ஒழுக்கக் கொள்கைகளைத் திருத்திக் கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது.
மேலும், மாணவர் எழுதிய கடிதத்தின் 1,000 பிரதிகளை அச்சிட்டதற்கு, இழப்பீடு வழங்கும்வகையில், மாணவருக்கு 100 யுவான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 1200) செலுத்துமாறு பள்ளி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’’ என்று கூறினார்.