மனைவியின் பாதுகாப்புக்காக துபை கோடீஸ்வரர் ஒருவர் தனித் தீவு ஒன்றை வாங்கியுள்ளார். மேலும் அந்தத் தீவின் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.400 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபை இல்லத்தரசி
துபையைச் சேர்ந்த இல்லத்தரசி ஒருவர் தனக்காக தனது கோடீஸ்வரக் கணவர் ஒரு தனித்தீவை வாங்கியுள்ளதாக இஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். மேலும், அந்தப் பதிவில், “நீங்கள் நீச்சல் உடை அணிய விரும்பினால், உங்கள் கோடீஸ்வர கணவர் உங்களுக்கு ஒரு தீவை வாங்கித் தருவார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இன்ஸ்டா பிரபலம்
யார் அவர் தெரியுமா.? துபையைச் சேர்ந்த 26 வயதான சௌடி அல் நாடக் என்ற பெண் இங்கிலாந்தில் பிறந்தவர். துபையில் உள்ள கோடீஸ்வரரான ஜமால் அல் நாடக் திருமணம் செய்துள்ளார். இருவரும் துபையில் உள்ள கல்லூரியில் ஒன்றாக படிக்கும் போது மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்துள்ளனர். சௌடி தற்போது முழுநேர இல்லத்தரசியாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஒரு பெரிய கோடீஸ்வரரின் மனைவியாக இருந்தபோதிலும்கூட சௌடி அல் நடாக் இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டாக்கில் விடியோக்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அவரின் இணையதள விடியோக்கள் மூலம் அவரின் ஆடம்பர வாழ்க்கையை பிரபலபடுத்தி வருகிறார். உதாரணமாக வெளிநாட்டில் விடுமுறை கொண்டாட்டங்கள், ஆடம்பரமான இரவு உணவுகள், டிசைனர் பொட்டிக்குகளில் ஷாப்பிங் செய்தல் போன்ற விடியோ மற்றும் புகைப்படங்களுக்கு சௌடி மிகவும் பிரபலம். மேலும், இந்த ஜோடி 10 லட்சம் டாலர்களுக்கு ஒரு வைர மோதிரம் வாங்கியது, 20 லட்சம் டாலர்களுக்கு ஓவியம் வாங்கியது உள்ளிட்ட விடியோக்களை தங்கள்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
தனித் தீவு
தற்போது அவரது கணவர் தனித் தீவு வாங்கித் தந்த விடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ஒருவாரத்துக்குள்ளாகவே, அந்த விடியோ 24 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.
இதுபற்றி சௌடி கூறுகையில், ஒரு முதலீடுக்காகவே தனது கணவர் தீவை வாங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட காரணங்கள் மற்றும் பாதுகாப்புக்காக தீவின் அமைவிடத்தை செல்ல மறுத்துவிட்டார் சௌடி. சுமார் 5 கோடி டாலர்களில் வாங்கப்பட்ட அந்தத் தீவு ஆசியாவில் அமைந்துள்ளது என்றும் மட்டும் கூறினார். இருப்பினும், அவரது தனித் தீவு குறித்த கருத்தை பார்வையாளர்கள் பொய்யாக இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர். மேலும், எனது வாழ்க்கை முறையை அனைவருடனும் பகிர்ந்து கொள்ள விரும்புவதால் எனக்கு ஏன் இவ்வளவு வெறுப்பு வருகிறது என்று எனக்குப் புரியவில்லை என்றும் சௌடி தெரிவித்துள்ளார்.