
அரசு நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதுடன் ஆக. 26 வரை அவருக்கு நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது.
ரணில் விக்ரமசிங்க 2022- 2024 இலங்கை அதிபராக இருந்தபோது அரசு நிதியில் சொந்தமாக பயணங்கள் மேற்கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டது. 2023 செப்டம்பர் 22, 23 ஆகிய தேதிகளில் லண்டன் பல்கலைக்கழகத்திற்கு தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள ரணில் விக்ரமசிங்க சென்றுள்ளார். இதற்காக இலங்கை அரசின் நிதியில் இருந்து ரூ. 1.7 கோடி பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக ரணில் விக்ரமசிங்க உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட உதவியாளரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து இதுதொடர்பாக ரணில் விக்ரமசிங்கவுக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், அவர் கொழும்புவில் சிஐடி(CID) அதிகாரிகள் முன்பு நேற்று(ஆக. 22) ஆஜரானார். அவரிடம் சுமார் 4 மணி நேரம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து உடனடியாக ரணில் விக்ரமசிங்க, குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இலங்கை முன்னாள் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளதற்கு அவரது ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து கொழும்புவில் உள்ள நீதிமன்றத்தில் ரணில் விக்ரமசிங்க ஆஜர்படுத்தப்பட்டார். அவரது ஜாமீன் மனுவை நீதிமன்றம் நிராகரித்ததுடன் அவருக்கு வருகிற ஆக. 26 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து இலங்கையின் மிகப்பெரிய சிறைச்சாலையான வெலிக்கடை சிறைச்சாலையில் ரணில் விக்ரமசிங்க அடைக்கப்பட்டுள்ளார். முன்னதாக நீதிமன்றத்தில் இருந்து போலீசார் அவரை கைவிலங்கிட்டு அழைத்துச் சென்றனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
ரணில் விக்ரமசிங்க கைது, இலங்கை அரசின் பழிவாங்கும் நடவடிக்கையே தவிர வேறொன்றும் இல்லை என்று இலங்கையின் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ச கூறியுள்ளார். எனினும் இது அரசியல் தலைவர்களின் மரபின் ஒருபகுதி, ரணில் அதை எதிர்கொள்வார் என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.