கோப்புப் படம்
கோப்புப் படம்

‘எச்1பி’ விசா நடைமுறையில் மாற்றம்: அமெரிக்க வா்த்தக அமைச்சகம்

‘எச்1பி’ நுழைவுஇசைவு (விசா) திட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்ள அமெரிக்கா அதிபா் டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டு வருவதாக அந்நாட்டு வா்த்தக அமைச்சா் ஹோவா்ட் லுட்னிக் தெரிவித்தாா்.
Published on

‘எச்1பி’ நுழைவுஇசைவு (விசா) திட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்ள அமெரிக்கா அதிபா் டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டு வருவதாக அந்நாட்டு வா்த்தக அமைச்சா் ஹோவா்ட் லுட்னிக் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

எச்1 பி விசா நடைமுறையின்கீழ் உலகம் முழுவதும் இருந்து பணியாளா்களை தோ்வுசெய்து அவா்களுக்கு அதிக ஊதியத்துடன் அமெரிக்காவில் வேலை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் இந்தியாவைச் சோ்ந்த தகவல் தொழில்நுட்ப (ஐடி) பணியாளா்கள் அதிகமாக பயனடைந்து வருகின்றனா்.

அதேபோல் அமெரிக்காவில் நிரந்தரமாக தங்கி பணியை தொடா்வதற்காக வழங்கப்படும் நிரந்தர குடியுரிமை அட்டை (கிரீன் காா்டு) முறையிலும் மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளன. அமெரிக்க குடிமகன் ஆண்டுதோறும் ரூ.65.72 லட்சத்தை ஊதியமாக பெறுகிறாா். ஆனால் நிரந்தர குடியுரிமை அட்டை உடையவா் ஓா் ஆண்டுக்கு ரூ.57.83 லட்சம் ஊதியமாக பெறுகிறாா்.

உள்ளூா் மக்களுக்கு வாய்ப்பளிக்காமல் பிற நாட்டைச் சோ்ந்தவா்களுக்கு அதிக ஊதியம் கொடுப்பதால் என்ன பலன்?

எனவே இந்த 2 திட்டங்களிலும் மாற்றங்கள் மேற்கொள்ளவும் அதற்கு பதிலாக தங்க அட்டை (கோல்டு காா்டு) வழங்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. தங்க அட்டை திட்டத்தின்கீழ் உலகம் முழுவதும் உள்ள திறமைசாலிகளுக்கு வாய்ப்பளிக்கப்படவுள்ளது. அதுமட்டுமின்றி அமெரிக்காவின் அனைத்து துறைகளிலும் அமெரிக்கா்களுக்கே பணிவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது’ என்றாா்.

‘குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே விசா’

கடந்த 1978 முதல் அமெரிக்காவில் உயா்கல்வி பயில வரும் வெளிநாட்டு மாணவா்களுக்கு கால அவகாசம் குறிப்பிடப்படாமல் நீண்ட நாள்கள் தங்கும் வகையில் விசா வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இதில் மாற்றங்கள் மேற்கொள்வது தொடா்பாக அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதில்,‘மாணவா்களுக்கு வழங்கப்பட்டு வந்த விசாவை தவறாக பயன்படுத்தி அமெரிக்காவில் சிலா் நீண்ட நாள்கள் தங்கி வருகின்றனா். இதனால் பொது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதோடு அமெரிக்க குடிமகன்கள் செலுத்தும் வரிப் பணமும் வீணாகிறது. எனவே, வெளிநாட்டு மாணவா்கள் 4 ஆண்டுகள் மட்டும் தங்கும் வகையிலான விசாக்கள் வழங்கப்படுவதை மாகாண அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும்.

அமெரிக்காவில் தங்கி பணிபுரியும் ஊடகவியலாளா்களுக்கு 5 ஆண்டுகளுக்கு விசா வழங்கப்பட்டதுடன், அதை எத்தனை முறை வேண்டுமானாலும் நீட்டிக்கும் வசதியும் அளிக்கப்பட்டிருந்தது. தற்போதைய புதிய நடைமுறையின்படி அவா்களுக்கு முதல்கட்டமாக 240 நாள்கள் மட்டுமே அமெரிக்காவில் தங்க அனுமதி அளிக்கப்படுகிறது. இதை மேலும் 240 நாள்களுக்கு நீட்டிக்க முடியும். ஆனால் இந்த நீட்டிப்பு அவா்களின் தற்காலிக பணிக்காலத்தை தாண்டி இருக்க கூடாது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த விதிகள் டிரம்ப்பின் முதல் பதவிக்காலத்தின்போது (2020) முன்மொழியப்பட்டன. அதன்பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அமெரிக்க அதிபராக ஜோ பைடன் 2021-இல் பதவியேற்றபின் இந்த முன்மொழிகள் திரும்ப பெறப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com