

ஜப்பானின் வடக்கு கடற்கரையையொட்டிய பகுதிகளில், நேற்று (டிச. 8) இரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 33 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஜப்பானின் ஹோன்ஷூ தீவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள அமோரி கடற்கரையிலிருந்து 80 கி.மீ. தொலைவில், பசிபிக் பெருங்கடலில் நேற்று இரவு 11.15 மணியளவில் 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 7.6 ஆகப் பதிவானதாக, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, இந்த நிலநடுக்கத்தினால் இவாட்டே பகுதியில் அமைந்துள்ள கூஜி துறைமுகத்தில் சுமார் 2 அடி அளவிலான சுனாமி அலைகள் உருவானதாகக் கூறப்படுகிறது. இதனால், பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள பல்வேறு முக்கிய நகரங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில், நிலநடுக்கத்தில் 33 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடற்கரையையொட்டிய பகுதிகளில் வசித்து வந்த நூற்றுக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு ஹச்சினோஹே விமானப் படைத் தளத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இத்துடன், ஏராளமான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், அங்கு ரயில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. சேதமடைந்த மின்சாரக் கட்டமைப்புகளை ஜப்பான் நாட்டு அதிகாரிகள் தற்போது சீரமைத்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
இதில், நேற்று இரவு விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை இன்று காலை 6.30 மணிக்கு விலக்கப்பட்டது. இருப்பினும், வரும் நாள்களில் இதைவிட மிகப் பெரிய அளவிலான நிலநடுக்கமோ அல்லது பின் அதிர்வுகளோ ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
முன்னதாக, ஜப்பானில் கடந்த 2011 ஆம் ஆண்டு 9.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு சுனாமி அலைகள் தாக்கியதால் 20,000-க்கும் அதிகமான மக்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: இந்திய அரிசிக்கும் வரி விதிக்க டிரம்ப் பரிசீலனை! புதின் வருகை எதிரொலியா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.