

ஹெச்-1பி விசா மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகக் கட்டணம் விதித்துள்ளதை எதிர்த்து கலிபோர்னியா உள்பட 20 அமெரிக்க மாகாணங்களின் அரசுகள் வழக்குத் தொடர்ந்துள்ளன.
அமெரிக்காவில் பணிபுரிய புதியதாக விண்ணப்பிக்கப்படும் ஹெச்-1பி விசாக்களுக்கு ரூ.91 லட்சம் (1 லட்சம் அமெரிக்க டாலர்கள்) கட்டணமாக விதித்து கடந்த செப்.19 ஆம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப் புதிய உத்தரவைப் பிறப்பித்தார்.
இதனால், வெளிநாட்டு தொழிலாளர்களைப் பெரிதும் சார்ந்துள்ள அமெரிக்க நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், அதிபர் டிரம்ப்பின் இந்த உத்தரவுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், அதிபர் டிரம்ப்பின் நிர்வாகம் அதிகார வரம்புகளைக் கடந்து செயல்படுதாகக் கூறி கலிபோர்னியா அரசின் தலைமையில் 20 மாகாண அரசுகள் வெள்ளிக்கிழமையில் (டிச. 12) ஃபெடரல் நீதிமன்றத்தில் புதிய வழக்கைத் தாக்கல் செய்துள்ளன.
இந்த வழக்கில், அரிசோனா, கொலராடோ, கனெக்டிகட், டெலாவேர், ஹவாய், இல்லினாய்ஸ், மேரிலாந்து, மாசசூசெட்ஸ், மிச்சிகன், மினசோட்டா, நெவாடா, வட கரோலினா, நியூ ஜெர்சி, நியூயார்க், ஓரிகான், ரோட் தீவு, வெர்மான்ட், வாஷிங்டன் மற்றும் விஸ்கான்சின் போன்ற மாகாணங்களின் அரசுகளும் இணைந்துள்ளன.
இதுகுறித்து, தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (டிஹெச்எஸ்) அதிகார வரம்புகளைக் கடந்து கட்டணம் விதித்துள்ளதாகவும், தேவையான அறிவிப்பு மற்றும் கருத்து நடைமுறைகளைத் தவிர்த்துவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த ஹெச்-1பி திட்டத்தின் மூலம் அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாடுகளைச் சேர்ந்த பொறியாளர்கள், ஆய்வாளர்கள், மருத்துவர்கள் மற்றும் ஆசிரியர்கள் போன்ற திறன்வாய்ந்த தொழிலாளர்களை வேலைக்குச் சேர்க்க வழி வகுத்தது.
ஆனால், ஹெச்-1பி விசாக்கள் மீது 10 மடங்குக்கும் அதிகமான கட்டணம் விதிக்கப்பட்டுள்ளதால் ஹெச்-1பி ஊழியர்களைச் சார்ந்திருக்கும் பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் மருத்துவமனைகள் அழுத்தத்தைச் சந்திக்கக் கூடும் எனக் கருதப்படுகிறது.
இருப்பினும், அதிபர் டிரம்ப்பின் நடவடிக்கைகள் அனைத்தும் அமெரிக்க தொழிலாளர்களை முன்னிலைப் படுத்தும் முயற்சிகள் எனவும், ஹெச்-1பி விசாக்கள் மூலம் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்க முடியும் என்றும் வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஹெச்-1பி விசாக்களின் கட்டண உயர்வால் அமேசான், மைக்ரோசாஃப்ட், மெட்டா மற்றும் ஆப்பிள் போன்ற முதன்மையான தொழிநுட்ப நிறுவனங்களில் ஊழியர்கள் பற்றாக்குறையை ஏற்படுத்தக் கூடும் எனக் கருதப்படுகிறது.
முன்னதாக, அமெரிக்காவில் கடந்த 2024 ஆம் ஆண்டு மட்டும் ஹெச்-1பி விசாவின் மூலம் பயனடைந்தவர்களில் 71 சதவிகிதம் பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: அமெரிக்கா: இந்தியா மீதான வரியை நீக்க மசோதா அறிமுகம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.