

அமெரிக்காவில், கடந்த 1970 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட, கிழக்கு கடற்கரைப் பகுதியின் 8 மாகாணங்களைச் சேர்ந்த இந்திய சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் லாப -நோக்கமற்ற அமைப்பான, இந்திய சங்கங்களின் அமெரிக்க கூட்டமைப்பு, 2026-ஆம் ஆண்டுக்கான தலைமைக் குழுவை அறிவித்திருக்கிறது.
இந்திய சங்கங்களின் அமெரிக்க கூட்டமைப்பு, (FIA NY-NJ-CT-NE), அலோக் குமார், ஜெயேஷ் படேல், கென்னி தேசாய் ஆகியோர் தலைமையில் அமைக்கப்பட்ட தேர்தல் ஆணையத்தின் மூலம், அமைப்பின் ஆண்டு உள் மதிப்பாய்வு மற்றும் தலைவர்கள் குழு தேர்வு செய்யும் நடைமுறைகைளை நிறைவு செய்துள்ளது.
இது தொடர்பாக ஆணையம் வைத்த பரிந்துரைகளுக்கு முழு ஒப்புதல் கிடைத்ததைத் தொடர்ந்து, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 2026 நிர்வாகக் குழு வரும் ஜனவரி 1ஆம் தேதி பதவியேற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய சங்கங்களின் அமெரிக்க கூட்டமைப்பின் 2026 நிர்வாகக் குழுவை வழிநடத்த ஸ்ரீகாந்த் அக்காபள்ளி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்,
தற்போதைய தலைவராக சௌரின் பாரிக் இருக்கிறார். முந்தைய நிர்வாகக் குழுவில் இருந்த துணைத் தலைவர் பிரிதி ரே படேல் மற்றும் பொதுச் செயலாளர் சிருஷ்டி கவுல் நருலா ஆகியோர் பதவியில் தொடர்கிறார்கள்.
ஸ்ரீகாந்த் அக்காபள்ளி யார்?
ஸ்ரீகாந்த் அக்காபள்ளி ஒரு புகழ்பெற்ற தொழில்முனைவோர். அவர் அமெரிக்கா மற்றும் இந்தியா என இரு நாடுகளிலும் ரியல் எஸ்டேட் மேம்பாடு, தொழில்நுட்பம், ஊடகப் பிரிவு, புலம்பெயர்ந்தவர்களுக்கான நலன் என பல துறைகளில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும், அவரது வணிக நிறுவனங்கள், மென்பொருள் மேம்பாடு, போக்குவரத்து துறை தொடர்பான தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்குதல், தகவல் தொழில்நுட்பம், விளையாட்டு சாதனங்கள் உற்பத்தி, மேஜை-நாற்காலி வடிவமைப்பு போன்றவற்றில் திறமையான தலைமைப் பண்பு மற்றும் தொலைநோக்குப் பார்வையுடன் முன்னேறி வருகிறார்.
தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் ஸ்ரீகாந்த், தனக்கு ஆதரவளித்தவர்களுக்கு நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொண்டுள்ளார். இந்த மிகப்பெரிய குடும்பத்துக்குள் தன்னை வரவேற்று அறிமுகப்படுத்திய நிர்வாகி அங்குர் வைத்தியாவுக்கு தன்னுடைய நன்றியை வெளிப்படுத்தியிருக்கிறார் ஸ்ரீகாந்த்.
தன்னுடைய மாகாணத்திலிருந்து, இந்தப் பொறுப்புக்குத் தேர்வு செய்யப்படும் முதல் ஆள் தான்தான் என்பதை பெருமிதத்துடன் கூறிய ஸ்ரீகாந்த், தன்னுடைய பொறுப்பை உணர்ந்து, ஒற்றுமை மற்றும் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வேன் என உறுதியளித்துள்ளார்.
அமைப்பின் மூத்த தலைவர்களும், நீண்ட கால உறுப்பினர்களும், ஸ்ரீகாந்த், தலைவராக தேர்வு செய்யப்பட்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மூத்த உறுப்பினர் ஒருவர் பேசுகையில், ஸ்ரீகாந்த், மிகவும் நேர்மையானவர், கடும் உழைப்பாளி, அவர் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டிருப்பது வரலாற்றுச் சிறப்பு மிக்க மற்றும் அமைப்பின் மேம்பாட்டுக்கு உதவும் வகையிலானது என தெரிவித்துள்ளார்.
இந்திய சங்கங்களின் அமெரிக்க கூட்டமைப்பானது முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் 50 ஆண்டுகளுக்கும் மேலாக லாப-நோக்கமற்ற சேவைகளை ஆற்றி வருகிறது. இந்த அமைப்புக்கு இந்தியாவின் பிரவாசி பாரதிய சம்மான் விருது வழங்கப்பட்டுள்ளது. இரண்டு கின்னஸ் உலக சாதனைகளை தன்னகத்தே வைத்துள்ளது இந்திய சங்கங்களின் அமெரிக்க கூட்டமைப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.