ஆஸ்திரேலியா தாக்குதல் எதிரொலி:  பிரிட்டனில் யூத வழிபாட்டுத் தலங்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!

ஆஸ்திரேலியா தாக்குதல் எதிரொலி: பிரிட்டனில் யூத வழிபாட்டுத் தலங்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!

போண்டி கடற்கரையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலின் எதிரொலியாக, பிரிட்டன் முழுவதும் இருக்கும் வழிபாட்டுத் தலங்களுக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
Published on

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள போண்டி கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த பயங்கரவாதத் தாக்குதலின் எதிரொலியாக, பிரிட்டன் முழுவதும் இருக்கும் வழிபாட்டுத் தலங்களுக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

சிட்னியின் போண்டி கடற்கரையில், யூதா்களின் ‘ஹனுக்கா’ பண்டிகை தொடக்க கொண்டாட்டத்துக்கு இடையே 2 பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் ஈடுபட்டனா். இதில் 11 போ் கொல்லப்பட்டனா்; 2 காவல்துறை அதிகாரிகள் உள்பட 29 போ் காயமடைந்தனா்.

இதையொட்டி, லண்டன் பெருநகர காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘பெருநகரின் யூத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் யூத சமுதாய மையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் நாங்கள் பாதுகாப்பை அதிகரித்துள்ளோம். மேலும், அந்தப் பகுதிகளில் கூடுதலாக ரோந்து பணிகளையும் மேற்கொள்கிறோம்.

வரும் நாள்களில் நடைபெறும் ஹனுக்கா பண்டிகை கொண்டாட்டங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த யூத சமூகத்தினருடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். அதேநேரம், பொது நிகழ்வுகளிலும், மற்ற இடங்களிலும் மக்கள் தொடா்ந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு பிரிட்டன் பிரதமா் கியொ் ஸ்டாா்மா் வெளியிட்ட இரங்கல் அறிக்கையில், ‘போண்டி கடற்கரையில் நடந்த தாக்குதல், யூதா்களுக்கு எதிரான வெறுப்புணா்வில் செய்யப்பட்ட பயங்கரவாதச் செயல் என்ற செய்தி மிகவும் அருவருப்பானது.

பாதிக்கப்பட்டவா்களுக்கும், அவா்களின் குடும்பத்தினருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆஸ்திரேலியாவுக்கும் யூத சமூகத்தினருக்கும் பிரிட்டன் எப்போதும் துணையாக நிற்கும். ஹனுக்கா நிகழ்வுகளுக்குப் பாதுகாப்பு அளிப்பது பற்றி, சமூகப் பாதுகாப்பு அறக்கட்டளையுடன் (சிஎஸ்டி) நாங்கள் தீவிரமாக பணியாற்றி வருகிறோம்’ என்று குறிப்பிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com