

பாகிஸ்தானில், போலியோ தடுப்பூசி செலுத்தும் குழுவிற்கான பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட காவல் அதிகாரி மீதான துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர்.
கைபர் பக்துன்குவா மாகாணத்தின், லக்கி மார்வட் பகுதியில் நேற்று (டிச. 16) குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி செலுத்தும் பணியில் தன்னார்வலர் குழுவினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவர்களுக்கான பாதுகாப்புப் பணியில் அமீர் நவாஸ் எனும் காவலர் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், போலியோ பணிகள் நிறைவடைந்து காவலர் அமீர் நவாஸ், அவரது சகோதரர் அமீர் முஹமது என்பவருடன் இருசக்கர வாகனத்தில் அவர்களது கிராமத்துக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சகோதரர்கள் இருவரின் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இந்தத் தாக்குதலில், காவலர் அமீர் நவாஸ் மற்றும் அமீர் முஹமது ஆகிய இருவரும் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து அங்கு விரைந்த காவல் துறை அதிகாரிகள் கொல்லப்பட்ட சகோதரர்களின் உடல்களைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
இத்துடன், தாக்குதல் நடைபெற்ற பகுதியில் பாதுகாப்புப் படை வீரர்கள் குவிக்கப்பட்டு, கொலையாளிகளைப் பிடிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இதேபோல், பஜௌர் மாவட்டத்தில் நேற்று காலை மற்றொரு போலியோ குழுவிற்கான பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் அதிகாரி ஒருவரும் மர்ம நபர்களின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார்.
முன்னதாக, பாகிஸ்தானில் போலியோ தடுப்பூசி செலுத்தும் பணியாளர்கள் மீதான பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஈரான், ஆப்கன், மியான்மர் உள்பட 20 நாட்டவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை! - அதிபர் டிரம்ப்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.