

வங்கதேசத்தில், கொல்லப்பட்ட மாணவர் இயக்கத் தலைவரின் இறுதிச்சடங்கில் லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
வங்கதேசத்தில், ஷேக் ஹசீனாவின் அரசுக்கு எதிராக, கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற மாபெரும் மாணவர் போராட்டத்தைத் தொடர்ந்து, அவர் தனது பிரதமர் பதவியை ராஜிநாமா செய்து நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
இந்தப் போராட்டத்தை, மாணவர்கள் இயக்கத்தின் தலைவர் ஷெரீஃப் உஸ்மான் ஹாடி என்பவர் முன்னெடுத்து நடத்தினார். இதனைத் தொடர்ந்து, நடைபெறவுள்ள வங்கதேச பொதுத் தேர்தல்களில் போட்டியிட திட்டமிட்டிருந்த உஸ்மான் டாக்கா நகரத்தில் கடந்த டிச.12 ஆம் தேதி பிராசாரம் மேற்கொண்டார்.
அப்போது, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். பின்னர், அந்த மர்ம நபர்கள் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, இந்தியாவுக்கு எதிராகவும், அவர் மீதான தாக்குதலைக் கண்டித்தும் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில், வங்கதேசத்தின் முன்னணி பத்திரிகை அலுவலகங்கள் தீயிக்கு இரையாகின.
இதனிடையே, தாக்குதலில் படுகாயமடைந்த உஸ்மான் ஹாடி உயிருக்கு ஆபத்தான நிலையில், மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றி கடந்த டிச.18 ஆம் தேதி உயிரிழந்தார்.
சிங்கப்பூரில் இருந்து நேற்று (டிச. 19) இரவு ஷெரீஃப் உஸ்மான் ஹாடியின் உடல் வங்கதேசம் கொண்டு வரப்பட்டதுடன், அந்நாடு முழுவதும் இன்று தேசிய துக்க நாளாக அறிவிக்கப்பட்டது. மேலும், டாக்கா நகரம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன.
இந்த நிலையில், வங்கதேசத்தின் நாடாளுமன்ற வளாகத்தில், இன்று நடைபெற்ற ஷெரீஃப் உஸ்மான் ஹாடியின் இறுதிச் சடங்கு நிகழ்வில் தேசிய கொடியுடன் லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து, அவரது உடல் டாக்கா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள வங்கதேசத்தின் தேசிய கவிஞர் காஸி நஸ்ருல் இஸ்லாமின் கல்லறைக்கு அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, கொல்லப்பட்ட ஷெரீஃப் உஸ்மான் ஹாடி, வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் இந்திய அரசுக்கு எதிராகத் தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: உக்ரைன் மீது ரஷியா ஏவுகணைத் தாக்குதல்! 8 பேர் பலி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.