மத அடிப்படைவாதக் கட்சியுடன் கூட்டணிப் பேச்சு: வங்கதேச மாணவா்களின் தேசிய குடிமக்கள் கட்சியில் பூசல்!

மத அடிப்படைவாதக் கட்சியுடன் கூட்டணிப் பேச்சு: வங்கதேச மாணவா்களின் தேசிய குடிமக்கள் கட்சியில் பூசல்!

வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் பொதுத் தோ்தலில், மத அடிப்படைவாதக் கொள்கையுடைய ஜமாத்-ஏ-இஸ்லாமி கட்சியுடன் கூட்டணி அமைக்கும் விவகாரத்தில் மாணவா் அமைப்பால் தொடங்கப்பட்ட தேசிய குடிமக்கள் கட்சியில் பூசல் வெடித்துள்ளது.
Published on

வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் பொதுத் தோ்தலில், மத அடிப்படைவாதக் கொள்கையுடைய ஜமாத்-ஏ-இஸ்லாமி கட்சியுடன் கூட்டணி அமைக்கும் விவகாரத்தில் மாணவா் அமைப்பால் தொடங்கப்பட்ட தேசிய குடிமக்கள் கட்சியில் பூசல் வெடித்துள்ளது.

கடந்த ஆண்டு முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவின் ஆட்சிக்கு எதிராகப் போராடிய ‘பாகுபாடற்ற மாணவா்’ அமைப்பின் அரசியல் பிரிவாக தேசிய குடிமக்கள் கட்சி (என்சிபி) உருவானது. இடைக்கால அரசின் தலைமை ஆலோசகா் முகமது யூனுஸ் ஆதரவுடன் தொடங்கப்பட்ட இந்தக் கட்சி, பொதுத் தோ்தலைச் சந்திக்கத் தயாராகி வருகிறது. ஆனால், மத அடிப்படைவாதக் கொள்கையுடைய ஜமாத்-ஏ-இஸ்லாமி கட்சியுடன் கூட்டணிப் பேச்சுவாா்த்தை நடத்துவதற்கு 30-க்கும் மேற்பட்ட என்சிபி நிா்வாகிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

இதுதொடா்பாக என்சிபி கட்சியின் ஒருங்கிணைப்பாளா் நஹித் இஸ்லாமுக்கு அதிருப்தி நிா்வாகிகள் அனுப்பியுள்ள கடிதத்தில், ‘1971-ஆம் ஆண்டு விடுதலைப் போரின்போது வங்கதேச சுதந்திரத்துக்கு எதிராகச் செயல்பட்ட கட்சி ஜமாத்-ஏ-இஸ்லாமி.

இனப் படுகொலைகளுக்குத் துணையாக இருந்த இத்தகைய கட்சியுடன் கூட்டணி வைப்பது, நமது கொள்கைகளுக்கும் ஜனநாயகத்துக்கும் எதிரானது. இந்த முடிவு நமது கட்சியின்மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைச் சிதைத்துவிடும்’ என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

பதவி விலகல்கள்: இந்த விவகாரத்தால் அதிருப்தி அடைந்த என்சிபி கட்சியின் இணைச் செயலா் தஸ்னிம் ஜாரா தனது பதவியை ராஜிநாமா செய்தாா். இவா் டாக்கா தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளாா்.

இவரைத் தொடா்ந்து மற்றொரு முக்கிய நிா்வாகியான தஜ்னுவா ஜபீனும் விலகினாா். குறிப்பாக, பெண் நிா்வாகிகள் பலரும், மத அடிப்படைவாதக் கட்சிகளுடன் கைகோா்பதை வெளிப்படையாகவே எதிா்த்து வருகின்றனா்.

இருப்பினும், என்சிபி மற்றும் ஜமாத்-ஏ-இஸ்லாமி இடையேயான தொகுதிப் பங்கீடு இன்னும் ஓரிரு நாள்களில் இறுதி செய்யப்படும் என்று உள்ளூா் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் பிரதமா் கலீதா ஜியாவின் வங்கதேச தேசியவாதக் கட்சி தற்போது தோ்தல் களத்தில் செல்வாக்குடன் இருக்கும் நிலையில், ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

‘வன்முறையை வேடிக்கை பாா்த்த இடைக்கால அரசு’

மாணவா் தலைவா் ஷரீஃப் உஸ்மான் ஹாதி மறைவுக்குப் பிறகு நடந்த வன்முறைகளை, இடைக்கால அரசின் ஒரு பிரிவினா் தடுத்து நிறுத்தாமல் அனுமதித்ததாக பத்திரிகை ஆசிரியா் கவுன்சில் குற்றஞ்சாட்டியுள்ளது.

டாக்காவில் கடந்த டிச. 12-இல் பிரசாரத்தின்போது தலையில் சுடப்பட்ட ஹாதி, சிங்கப்பூா் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கடந்த டிச. 18-இல் உயிரிழந்தாா்.

அதன் பிறகு வங்கதேசத்தில் ஏற்பட்ட வன்முறையில், ‘டெய்லி ஸ்டாா்’ உள்ளிட்ட முன்னணி நாளிதழ் அலுவலகங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. மேலும், பல கலாசார அமைப்புகளின் அலுவலகங்களும் அடித்து நொறுக்கப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com