

ஆஸ்திரேலிய கிரிக்கெட் முன்னாள் வீரர் டேமியன் மார்ட்டின் கவலைக்கிடமான நிலையில், பிரிஸ்பேனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனுக்கு தெற்கே உள்ள கோல்ட் கோஸ்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மார்ட்டின், கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் புதன்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன.
54 வயதான டேமியன் மார்ட்டின் சமீபத்திய நாள்களில் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த அவர் தற்போது கோமா நிலையில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
டார்வினில் பிறந்தவரான டேமியன் மார்ட்டின், 1992 ஆம் ஆண்டு தனது 21 வயதில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார்.
அதைத் தொடர்ந்து 23 வது வயதில் மேற்கு ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். இவர், தேசிய அணிக்காக இதுவரை 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
2005 ஆம் ஆண்டு நியூசிலாந்திற்கு எதிராக அவர் 165 ரன்கள் குவித்திருந்தார். 2006-07 ஆஷஸ் தொடரில் கடைசியாக விளையாடியிருந்தார். டெஸ்ட்டில் மொத்தமாக 13 சதங்கள் விளாசியுள்ளார். கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் வர்ணனையாளராகவும் பணியாற்றினார்.
மார்ட்டின் 208 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். 1999 மற்றும் 2003 உலகக் கோப்பைகளை வென்ற ஆஸ்திரேலிய அணியிலும் அங்கம் வகித்தார்.
2003 இல் இந்தியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் உடைந்த விரலுடன் பேட்டிங் செய்து ஆட்டமிழக்காமல் 88 ரன்கள் எடுத்தும் ஆச்சரியப்படுத்தியிருந்தார். மேலும் 2006 சாம்பியன்ஸ் டிராபியை வென்ற அணியிலும் இடம்பெற்றிருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.