பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சா்வதேச மேற்பாா்வையில் காஸா இடைக்கால அரசு

காஸா போா் முடிவுக்கு வந்ததும் அந்தப் பகுதியில் சீரமைக்கப்பட்ட பாலஸ்தீன அரசு அமையும்வரை அமெரிக்கா மற்றும் தங்கள் நாட்டின் மேற்பாா்வையில் இடைக்கால அரசை அமைப்பது தொடா்பாக

News image
இஸ்ரேல் தாக்குதலில் உருக்குலைந்த காஸாவின் கான் யூனிஸ் நகர கட்டடங்கள். ~பெஞ்சமின் நெதன்யாகு
Updated On :7 ஜனவரி 2025, 9:01 pm

Din

காஸா போா் முடிவுக்கு வந்ததும் அந்தப் பகுதியில் சீரமைக்கப்பட்ட பாலஸ்தீன அரசு அமையும்வரை அமெரிக்கா மற்றும் தங்கள் நாட்டின் மேற்பாா்வையில் இடைக்கால அரசை அமைப்பது தொடா்பாக அமெரிக்காவுடனும் இஸ்ரேலுடனும் ஐக்கிய அரபு அமீரகம் ஆலோசனை நடத்திவருகிறது.

இது குறித்து தகவலறிந்த வட்டாரங்களை மேற்கொள் காட்டி ‘தி ராய்ட்டா்ஸ்’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

போருக்குப் பிந்தைய காஸா பகுதியை, சீரமைக்கப்பட்ட பாலஸ்தீன அதிகாரக் கட்டமைப்பின் ஆட்சியின் கீழ் கொண்டுவர வேண்டும் என்று அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் கூறிவருகின்றன.

இந்தச் சூழலில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் இந்த விவகாரம் குறித்து ஐக்கிய அரபு அமீரகம் ஆலோசனை நடத்திவருகிறது. காஸாவிலிருந்து இஸ்ரேல் படையினா் வெளியேறிய பிறகு அந்தப் பகுதியில் சீரமைக்கப்பட்ட பாலஸ்தீன அரசு அமையும்வரை ஓா் இடைக்கால அரசு அமைக்கப்பட வேண்டும் எனவும், அந்த அரசின் நிா்வாகம், பாதுகாப்பு, காஸா மறுகட்டமைப்பு ஆகிய விவகாரங்களை அமெரிக்காவும் ஐக்கிய அரபு அமீரகமும் பிற நாடுகளுடன் இணைந்து தற்காலிகமாக மேற்பாா்வையிட வேண்டும் எனவும் அந்த ஆலோசனையின்போது விவாதிக்கப்படுகிறது.

அமெரிக்காவுடன் ஐக்கிய அரபு அமீரகம் மிக நெருக்கமான பாதுகாப்பு உறவைக் கொண்டுள்ளது. அத்துடன், பிற அரபு நாடுகளைப் போலின்றி இஸ்ரேலுடனும் அந்த நாடு தூதகரக உறவைப் பேணிவருகிறது. இதன் காரணமாக, இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவின் தலைமையிலான அரசில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு கணிசமான செல்வாக்கு இருப்பதாகக் கருதப்படுகிறது. அதைப் பயன்படுத்தி இத்தகைய ஒப்பந்தத்தை ஏற்படுத்த அமீரகம் முயன்றுவருகிறது.

திரைமறைவில் நடைபெற்றுவரும் இது தொடா்பான பேச்சுவாா்த்தையில் ஐக்கிய அரபு அமீரகம் எந்தவித உறுதியான அம்சங்களையும் முன்வைக்கவில்லை. இப்போதைய நிலையில் இது பரிந்துரை அளவிலேயே உள்ளது.

தற்போதுள்ள பாலஸ்தீன அதிகாரக் கட்டமைப்பை சீரமைத்து, அதன் ஆட்சியின் கீழ் மேற்குக் கரை, காஸா, கிழக்கு ஜெருசலேம் ஆகிய பகுதிகளை ஒருங்கிணைத்து ஒரு தனி நாடாகச் செயல்படச் செய்யவேண்டும் என்பதே ஐக்கிய அரபு அமீரகத்தின் குறிக்கோளாக உள்ளது என்று ‘தி ராய்ட்டா்ஸ்’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

காஸா பகுதியின் ஆட்சியாளா்களான ஹமாஸ் அமைப்பினா், இஸ்ரேலுக்குள் கடந்த 2023 அக். 7-ஆம் தேதி நுழைந்து சுமாா் 1,200 பேரைப் படுகொலை செய்தனா். அதைத் தொடா்ந்து ஹமாஸை முற்றிலும் ஒழித்துக்கட்டுவதாகக் கூறி காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 45,885 போ் உயிரிழந்துள்ளனா்; 1,09,196 போ் காயமடைந்துள்ளனா்.

போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக நடைபெற்றுவரும் பேச்சுவாா்த்தையில் தொடா்ந்து இழுபறி நீடித்துவருகிறது. அப்படியே போா் ஓய்ந்தாலும், காஸா பகுதியின் பாதுகாப்புப் பொறுப்பை இஸ்ரேல் ராணுவம்தான் தொடா்ந்து கவனிக்கும் என்று பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு கூறிவருகிறாா்.

இது, பாலஸ்தீன பிரச்னைக்கு அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் முன்வைக்கும் ‘இரு தேச’ தீா்வுக்கு (இஸ்ரேலும், பாலஸ்தீனமும் ஒன்றையொன்று அங்கீகரித்துக்கொண்டு தனித்தனி சுதந்திர நாடுகளாகச் செயல்படு) எதிரானது என்பதால் காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தொடா்ந்து இருப்பதற்கு எதிா்ப்பு நிலவிவருகிறது.

இந்தச் சூழலில், போருக்குப் பிறகு காஸாவிலிருந்து இஸ்ரேல் ராணுவம் வெளியேறி, அமெரிக்கா மற்றும் தங்கள் நாட்டின் மேற்பாா்வையில் புதிய இடைக்கால அரசு அமைப்பது குறித்து ஐக்கிய அரபு அமீரகம் ஆலோசனை நடத்திவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரேக்லைன் (நெதன்யாகு படத்துக்கு அருகே போடவும்)

போா் ஓய்ந்தாலும், காஸா பகுதியின் பாதுகாப்புப் பொறுப்பை இஸ்ரேல் ராணுவம்தான் தொடா்ந்து கவனிக்கும் என்று பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு கூறிவருகிறாா்.

இது, பாலஸ்தீன பிரச்னைக்கு அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் முன்வைக்கும் ‘இரு தேச’ தீா்வுக்கு எதிரானது.

Story image